Dynamic Encoded Unicode Tamil Blog<< September 2019 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
01 02 03 04 05 06 07
08 09 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30
Contact Me

If you want to be updated on this weblog Enter your email here:

Blogdrive


Wednesday, December 24, 2003
நினைவுத் தடங்கள் - 7


மஹாத்மாவின் மரணம் ஏற்படுத்திய பாதிப்பில் தன்னிச்சையாக எழுந்த ஆவேச உணர்வில் எழுதிய கட்டுரை மேலும் எழுதும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதை வெளிப்படுத்த எல்லோரையும் போல கையெழுத்துப் பத்திரிகை ஒன்றை ஒன்பதாம் வகுப்பில் படித்த போது தொடங்கினேன். `ஒளி` என்று அதற்குப் பெயர். நான் ஓவியமும் வரைவேன் என்பதால் அட்டைப்
படம் முதல் எல்லாவற்றிற்கும் நானே படம் போட்டேன். கோடு போடாத வெள்ளை 40 பக்க நோட்டை வாங்கி,நோட்டுப் புத்தகமாகத் தெரியக்கூடாது என்பதற்காக அகலத்தைக் கொஞ்சம் குறைத்து வெட்டி டிராயிங் நோட்டுத் தாளை அட்டைத்தாளாகத் தைத்து இதழை உருவாக்கினேன். அப்போது எங்கள் வீட்டில் கல்கி இதழ் வந்து கொண்டிருந்ததால், அதுதான் எனக்கு வழிகாட்டியாயிற்று. கதை, கட்டுரை, கவிதை பொன்மொழிகள், கார்ட்டூனெல்லம் இருந்தது அதில்.என்ன ஒரு பிரச்சினை என்றால் எல்லவற்றையும் நானே வெவ்வேறு பெயரில் எழுத வேண்டியிருந்தது.


அதனால் என் வகுப்பில் படித்த தமிழ் ஆர்வம் மிக்க ஒரு மாணவருக்கு எனக்குத் தெரிந்த ஆசிரியப்பா, வெண்பா எழுதும் முறைகளை அவருக்குச் சொல்லிக் கொடுத்து அவரையும் கவிதைகள் எழுத வைதேன். ஆறுமுகம் என்ற அந்த நண்பர் முனைவர் ஆறுமுகமாகி திருக்குறள் அறிஞாரகவும் சிறந்த மரபுக்கவிஞரகராகவும் இன்று விளங்குக்¢றார். 1949ல் `ஒளி`யில் அவர் எழுதிய கவிதை ஒன்றை அவரது சுய சரிதைக்காக 50 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் நான் பாதுகாத்து வைத்திருக்கிற `ஒளி` யின் இதழ் ஒன்றிலிருந்து அவரது கவிதை ஒன்றை நான் பிரதி எடுத்து அனுப்பியபோது அவர் பரவசமும் நெகிழ்ச்சியும் மிக்கவராய் நன்றி தெரிவித்து எழுதினார்.பள்ள்¢ இறுதியாண்டின் மத்திவரை 2 ஆண்டுகள் போல `ஓளி` வெள்¢வந்தது. இறுதித்தேர்வைப் பாதிக்கும் என்பதால் என் மீது அக்கறை கொண்ட ஆசிரியர் ஒருவரது அறிவுரையின்படி இதழ் நிறுத்திவைக்கப் பட்டது.


அப்போது ஆறாம் வகுப்பில் தமிழாசிரியராக இருந்த வித்வான் சாம்பசிவ ரெட்டியார் முதனிலைத் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்று எங்களுக்குப் பள்ளி இறுதியாண்டில் தமிழ் கற்பிக்க வந்தார். அது என் எழுத்து வெளிப்பாட்டுக்கு முக்கியத் திருப்பமாக அமைந்தது. அவர் தன் கல்வித் தகுதியை மட்டும் உயர்த்திக் கொள்ளவில்லை; தன் நடை, உடை பாவனைகளையும் மாற்றிக் கொண்டு வந்திருந்தார். தமிழாச்¢ரியர் என்றால் ஜிப்பா,தோளில் மடித்துப் போட்ட அங்கவஸ்திரம் என்ற மரபுத்
தோற்றத்தை மாற்றி பேண்ட், புஷ் ஷர்ட்,கட் ஷ¥ என்று ஆங்கிலபாணி உடையில் முதன் முதல் எங்கள் பள்ளி இறுதி வகுப்பில் அவர் நுழைந்த போது நாங்கள் வெகுவாகக் கவரப்பட்டோம். தோற்றத்தில் மட்டுமல்லாமல் போதனையிலும் அவர் வித்தியாசமாகத் தெரிந்தார்.


கம்பராமாயணத்தையும்,வில்லிபாரத்தையும்,பாரதியையும்,பாரதி தாசனையும் இசையோடு அவர் நடத்தினார். பாரதி தாசனின் `காலை இளம் பரிதியிலே அவளைக் கண்டேன்...`என்ற `அழகின் சிரிப்பு` பாடலும் தசரதன் கைகேயிடம் ராமனைக் காட்டுக்கு அனுப்பும் வரத்தை மட்டும் கைவிடக் கோரி இறைஞ்சும் பாடல்களும் இன்னும் என் காதுகளில் ரீங்கரித்துக் கொண்டிருக் கின்றன. அவர் ஒரு எழுத்தளராகவும் ஆகி இருந்தார் என்பது கூடுதல் கவர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் அப்போதைய - நாரண துரைக்கண்ணனின் `ஆனந்த போதினி` யில் இலக்கியக் கட்டுரைகள் எழுதி வந்தார். அந்த ஆர்வத்தில் அப்போதைய தமிழ் ஆசிரியர்களிடமிருந்து மாறுபட்டவராக, எங்களது எழுத்துத் திறனையும் வளர்க்கும் நோக்கத்தில் ` கலைப் பயிர்` என்ற ஒரு கையெழுத்துப் பத்திரிகையைப் பள்ளி சார்பில் தொடங்கினார். எனது கையெழுத்துப் பத்திரிகை அனுபத்தால் பத்திரிகை ஆசியக்குழுவில் என்னையும் சேர்த்திருந்தார். இதற்கும் நான் தான் ஓவியன். கதையும் எழுதித் தரும்படி ஊக்க மூட்டினார். என் ஆரம்பப் பள்ளி வீரசைவ ஆசிரியரின் அர்ப்பணிப்பான பணியை வெளிப்படுத்தும்படி `எங்கள் வாத்தியார்` என்ற நடைச் சித்திரம் போன்றதொரு கதையை கொஞ்சம் நகைச்சுவையுடன் முதல் இதழுக்கு எழுதிக் கொடுத்தேன். தமிழாசிரியர் அதை வெகுவாகப் பாராட்டி அறிமுக உரையில் எழுதியதுடன் `இந்தக் கதையைப் பத்த்¢ரிகைக்கு அனுப்பினால் பிரசுரமாகும். இந்த மாணவன் நல்ல எழுத்தாளனாக வர வாய்ப்பிருக்கிறது` என்று குறிப்பிட்டிருந்தார். எத்தனை ஆசிரியருக்கு அப்படிப் பட்ட பரந்தமனம் இருக்கிறது?

அவர் பாதையில் நான் ஆசிரியரான போது இன்றைய கவிஞர் பழமலய் ஒன்பதாம் வகுப்பில் `மலை`என்ற கைஎழுத்துப் பத்திரிகை நடத்தியபோது நான் பாராட்டி `உன்னுள் கவிதை ஊற்று இருக்கிறது. தோண்டத் தோண்ட அது பிரவகித்து ஒரு நல்ல கவிஞனாய் எதிர்காலத்தில் பிரகாசிக்க வைக்கும்` என்று எழுதி உற்சாகப்படுத்தினேன். அதை இன்று புகழ் பெற்ற கவிஞரான நிலையிலும் , நான் என் ஆசிரியரைக் குறிப்பிடுவதுபோல அவர் நன்றியோடு சொல்லிக் கொண்டிருக்கிறார். நான் தமிழாசிர்¢யரைத் தனிமையில் சந்தித்து எப்படி என் கதையைப் பத்திரிகைக்கு அனுப்புவது என்று கேட்டேன். அவரது வழிகாட்டலின்படி பிரதி எடுத்து `ஆனந்த போதினி`க்கு அனுப்பி வைத்தேன். பிறகு இறுதித் தேர்வுக்கான செலக்ஷன் பரீட்சைக்கு (அப்போதெல்லாம்
எஸ்.எஸ்.எல்.சி பரிட்சைக்கு முன் செலக்ஷன் தேர்வு என்றொரு கண்டமுண்டு. 1959ல் தான் அதை நீக்கினார்கள்) தயார் செய்யும் நெருக்கடியில் கதை பற்றி மறந்து போனேன். மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் மாலை தமிழாசிரியர் என்னை வீட்டுக்கழைத்து அவருக்கு சந்தா கட்டியதால் வரும் அந்த மாதத்தின் (அக்டோபர்- 1950) `ஆனந்த போதினி`யில்
வெளியாகி இருந்த என் கதையைக் காட்டினார். அப்போது எனக்கு ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கை எப்படிச் சொல்வது? பள்ளி இறுதி வகுப்பை முடிப்பதற்குள்-அதிலும் முதல் கதையே பிரசுரமாவது என்றால் எப்படிப் பரவசம் உண்டாகும் என்பதை, கல்லூரிக்குப் போன பின் காண்டேகரைப் படித்தபோது அவர் எழுத்தில் கண்டேன். அவர் எழுதினார். `முதல் காதல், முதல் பிரசவம், முதல் கதை-இவற்றிற்குத் தனிப்பரவசம் உண்டு`.அன்றே நான் பள்ள்¢யின் ஹீரோ ஆநேன். கதை வந்த இதழை ஒரு மாதம் தலைக்கடியிலேயே வைத்துக் கொண்டு தூங்கினேன் என்றால் கேட்பவர் களுக்குச் சிரிக்கத்தான் தோன்றும்.அச்சில் என் கதை வந்து நான் எழுத்தாளனாக அங்கீகாரம் ஆனதற்கு என் தமிழாச்¢ரியர் வித்வான் சாம்பசிவ ரெட்டியாரையும், பள்ளி மாணவன் என்று உதாசீனப் படுத்தாது வெளியிட்டு உற்சாகப்படுத்திய நாரண துரைக்கண்ணன் அவர்களையும் நான் என்றும் மறக்கவியலாது. அதோடு இன்று முன்னணியில் இருக்கிற அனேக பிரபல எழுத்தாளர்கள்-ஜெயகாந்தன் உட்பட, `ஆனந்த போதினி`யில் தொடங்கியவர்கள் என்பதைப் பலர் அறிந்திருக்க முடியாது.

- தொடர்வேன்.
- வே.சபாநாயகம்.

Posted at 09:07 pm by Tamil Blogs
Make a comment

Friday, December 19, 2003
நினைவுத் தடங்கள் - 6நான் எழுத்தாளனாக உருவானதற்கு முந்தைய கட்டமான பேச்சாளன் ஆன சூழ்ந்லையை முதலில் சொல்ல வேண்டும். உள்ளூரில் ஐந்தாம் வகுப்பு முடித்து பக்கத்து சிறிய நகரான பெண்ணாடம் போய் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்தேன். தரையில் பிள்ளைகள் உட்கார ஆற்றுமணல் பரப்பிய எங்களூர்ப் பள்ளிக்கும் புதிய பள்ளிக்கும் பெரிய மாற்றம் தெரிந்தது. முதல் தடவையாக பெஞ்சில் அமர்ந்தேன். ஒவ்வொரு வகுப்புக்கும் தனி அறை; ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனி ஆசிரியர். வகுப்பறையின் வெள்ளை வெளேரென்ற சுவற்றின் மேல்பகுதியில்- `தாழ்ந்து நின்றால் வாழ்ந்து ந்ற்பாய்` என்பது போன்ற, இளம் நெஞ்சில் சிலா சாசனமாய்ப் பத்யும் எளிய கருத்துரைகள் எழுதப் பெற்று வகுப்பினுள் நுழைந்ததுமே ஒரு பரவசத்துக்கு ஆளானேன். சனிக்கிழமை அரை நாள் பள்ளி. அன்று இலக்கிய மன்றம். அதுதான் எனக்குப் பேச்சுப் பயிற்சியை அளித்தது. அதை இயக்கிய தமிழாசிரியர் வித்வான் சாம்பசிவ ரெட்டியார் தான் நான் பேச்சாளன் ஆனதற்கும் எழுத்தாளனாய் ஆனதற்கும் தூண்டுதலாய் இருந்தவர். வாரந்தோறும் தரப்படும் தலைப்புகளில், அவர் எழுதித் தந்த பேச்சை நான் ஒரு கூட்டங்கூட விடாமல் பேசி வந்தேன். அவர் ஒரு புதுமையையும் புகுத்தினார். அதுவரை ஆசிரியர்களில் ஒருவர் தலைமை வகித்து நடத்திய கூட்டத்திற்கு மாணவர்களைத் தலைமை ஏற்கச் செய்தார். முதல் வாய்ப்பை எனக்களித்தார். அப்போது எனக்குப் பனிரெண்டு வயதுதான். ஆறாம் வகுப்பின் இறுதியில் அந்தப் பள்ளிக்கு மட்டுமல்ல வேறு எந்தப் பள்ளிக்கும் புதுமையான அந்த அனுபவம் எனக்குப் பெரிய தன்னம்பிக்கையை அப்போது ஊட்டியது.

அப்போது அந்த ஊர்வழியே காமராஜர் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். 1945 ஆம் ஆண்டு. வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நாடே கொந்தளித்துக் கொண்டிருந்த நேரம். காமராஜர் அங்கு இறங்கிப் பேசத் திட்டமில்லை. ஆனாலும் உள்ளூர் மக்கள் அவர் வரும் சாலையின் குறுக்கே நின்று வழிமறித்து ஒரு ஐந்து நிமிஷம் பேசிச் செல்லுமாறு அடம் பிடித்தார்கள். முதலில் கோபப் பட்டாலும் மறுக்க முடியாது சாலையோரம் போட்டிருந்த திறந்தமேடை மீது நின்று ஐந்து நிமிஷம் பேசினார். அப்போது அவருடன் வந்த ஒரு துடிப்பான இளைஞர்-ராஜகோபாலன் என்பவர் பின்னாள்ல் தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளராகவும் தூக்குமேடை ராஜகோபாலன் என்றும் அறியப்பட்டவர் என்று ஞாபகம்- `இரண்டே நிமிஷம்` என்று கமராஜரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு மிக ஆவேசமாய் எச்சில் தெறிக்க இரண்டே நிமிஷத்தில் ஒரு உணர்ச்சிப் பெருக்கை பார்வையாளர்களிடையே உருவாக்கினார். `வெள்ளைக்காரனை புட்பாலை உதைக்கிற மாதிரி உதைத்து வெளியேற்ற வேண்டும் என்று புட்பால் உதைக்கிறமாதிரி வலது காலை முன்னோக்கி விசிறிக் காட்டினார். அப்போது என்னுள் குபீரென்று சுதந்திரக் கனல் மூண்டது. `வந்தேஏஏஏ மாதரம்` என்று எனையறியாமலே ஆவேசமாய்க் கூவினேன். கூடி இருந்த எல்லோரும் ஆவேசமாய் என்னைப் பின்பற்றிக் கூவினார்கள். அது முதல் அவரைப்போலவே பேசத் தொடங்கினேன். என் வயதொத்த சிறுவர்களைக் கூட்டி வைத்து நானே தயாரித்த சின்ன மூவர்ணக்கொடியை ஒரு சாரணர் கழியில் ஏற்றி ஆவேசமாய்ப் பேசுவேன். அந்தக் கூட்டத்தில்தான் காமராஜர் வருவதற்கு முன் ஒரு ஆசிரியர் பாரதியின் வ.உ.சிக்கும் ஜாக்ஸன் துரைக்குமிடையே நடப்பதாக கற்பனையில் எழுதிய வாக்குவாதத்தை நெஞ்சை உருக்குகிறபடி உணர்ச்சிகரமாய்ப் பாடினார். அதுதான் நான் முதன்முதலாகக் கேட்ட பாரதியின் சுதந்திரக் கனலெழுப்பிய பாட்டு. அது பாரதியின் மற்றப் பாடல்களையும் தேடிப்பாட வைத்தது. இதன் தொடர்ச்சியாக காந்தி நேரு ஆகிய தலைவர்கள்மீது ஆவேசமான பக்தி எழுந்தது; கூட்டங்களில் அவர்களது பெருமையைப் பேச வைத்தது. 1947 ஆகஸ்ட் 15ல் சுதந்திரம் பெற்றபோது கோலாகலமாக ஊரே கொண்டாடியது. சிறுவர்களாகிய நாங்களும் உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டாடினோம். அந்த உணர்ச்சிக்கொந்தளிப்பு அடங்கு முன்னர் 1948 ஜனவரி இரவு நடுநிசியில் தலையில் இடிவிழுந்த மாதிரி தமுக்குச் சத்தம் கேட்டது. காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை தண்டோரா போட்டுத் தெருத்தெருவாகச் சொல்லிக் கொண்டு போனார்கள். வானொலி மைதானத்தில் ஊரே திரண்டு ஓலமிட்டது. வானொலியின் பரபரப்பான செய்தியைக் கேட்டு எல்லா மக்களும் துடித்தார்கள். சோக உணர்வு உந்த வீட்டுக்கு வந்த நான் ஆவேசமாய் காந்தியடிகளின் படுகொலை பற்றிப் பரபரவெனப் பத்துப் பக்கங்களுக்குமேலாக என் சோகத்தை இடம் மாற்றிய பிறகுதான் ஓய்ந்தேன். அதுதான் நான் எழுதிய முதல் படைப்பு. நான் எழுத்தாளன் ஆக முதல் விதை அப்போதுதான் ஊன்றப் பட்டிருக்க வேண்டும். அப்போது நான் எட்டாம் வகுப்பில்படித்துக் கொண்டிருந்தேன்.

- தொடர்வேன்

-வே.சபாநாயகம்.


Posted at 01:47 pm by Sabanayagam
Make a comment

Saturday, December 13, 2003
நினைவுத் தடங்கள் - 5நான் இன்று பிழையின்றி எழுதவும் சரளமாய்ப் படிக்கவும், நான் துவக்கக் கல்வியில் பெற்ற பயிற்சிதான் என்றால் இன்றைய கல்வி முறையில் நம்ப முடியாதுதான். அப்போது ஐந்து வகுப்புகளுக்கு முன் `அரிச்சுவடி` என்றொரு வகுப்பு இருந்தது. அந்த ஆண்டு முழுதும் மொழிப் பயிற்சிதான். மணலில் தமிழ் எழுத்து 247 ஐயும் ராகம் போட்டு சொல்லி சொல்லி எழுத வேண்டும். அது அத்துபடி ஆனபிறகே ஒன்றாம் வகுப்பு. அதில் ஓரெழுத்துச் சொல், ஈரெழுத்துச்சொல், மூவெழுத்துச் சொல், நாலேழுத்துச் சொல்.. என்று படிப்படியாக சிலேட்டில் எழுதிப் பழகி, பிறகு இருசொல் வாக்கியம், மூன்று சொல் வாக்கியம் என்று தொடங்கி, பெரிய வாக்கியங்கள் படிக்கப் பயிற்சி தரப்படும். ஒன்றாம் வகுப்பில் `உலகநீதி`, இரண்டாம் வகுப்பில் `ஆத்திச்சூடி`, மூன்றாம் வகுப்பில் `கொன்றைவேந்தன்`, நான்காம் வகுப்பில் `வெற்றிவேற்கை`, ஐந்தாம் வகுப்பில் `விவேக சிந்தாமணி`, `மூதுரை`, `நன்னெறி`.....என்று ஐந்து ஆண்டுகளில் பிற்கால நீதி நூல்கள் அனைத்தும் பாடம் ஆகிவிடும். 4, 5வது வகுப்புகளில் ஆண்டுக்கு ஒரு சதகம்- புரிந்தாலும் புரியாவிட்டாலும் பதம் பிரித்துப் போடப்படாத பிரதிகளிலிருந்து நெட்டுருச் செய்ய வேண்டும். அப்படி மனப்பாடம் செய்தவைதான் இன்று பேச்சுக்கும் எழுத்துக்கும் அழைக்கு முன்னே வந்து கை கட்டி நிற்கின்றன. பின்னாளில் அர்த்தம் புரிந்து கல்லூரிகளில் படித்தவை எல்லாம் சமயத்துக்கு காலைவாரி விட்டுவிடுவதைப்
பார்க்கிறோம். அப்படிக் கிடைத்த பயிற்சியினால்தான் ஐந்தாம் வகுப்பில் படிக்கும்போதே தலைணை போன்ற பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையைத் தடங்கலின்றிப் படிக்க முடிந்தது.

பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை பிள்ளைப் பிராயத்திற்கு ஒரு வசீகரமான நூல். ஏன்- எந்த வயதிலும் வசீகரமானது தான். நான் குறிப்பிடுவது இன்றைய மறு ஆக்க விக்கிரமாதித்தன் அல்ல. அந்தக் காலத்துப் பழைய பதிப்பு. பழைய பாணி ஓவியங்களுடன், பெரிய எழுத்தில் பாமர மக்கள் படிக்கும்படி வெளியாகி, திருவிழாக் கடைகளில் விற்ற பதிப்பு. கதைக்குள் கதை, அதற்குள் அனேக கதைகள் என பிரமிப்பூட்டும் யுக்தியாலானது. அராபிய இரவுகளின் ஆயிரத்தோரு கதைகளுக்கு எவ்வகையிலும் சோடை போகாத கதைகள். அது என் கதைபடிக்கும் ஆர்வத்தைத் தூண்டி விட்டது. அதன் தொடர்ச்சியாய் கிராமத்துப் பெரியவர்கள் கனத்த அட்டை போட்டுப் பாதுகாத்துவருகிற நூல்களில் ஒன்றான `ஆயிரம் தலை வாங்கி
அபூர்வ சிந்தாமணி`யும் வடுவூர் துரைசாமி அய்யரின் துப்பறியும் நாவல்களும் எனக்குப் பனிரெண்டு வயதுக்குள்ளேயே
படிக்கக் கிடைத்ததும் என் மொழ் ஆளுமைக்கு உரமாக அமைந்தது. அது போன்ற கதைகள் எழுதவும் ஆவல் ஏற்பட்டது.


உயர்நிலைப் பள்ளிப் படிப்பின் போது அண்ணாமலையில் பி.ஓ.எல் படித்துக்கொண்டிருந்த என் உறவினர் ஒருவரின்
தூண்டுதலால் டாக்டர் மு.வ வின் நாவல்களைப் படிக்க நேர்ந்த்து. அது -1950கள்- மு.வ வின் யுகம். திருமணங்களில்
மணமக்களுக்கு மு.வ வின் நூல்கள் பரிசாக அளிக்கப்பட்டன. ஒரே தலைப்புக் கொண்ட நூல் நான்கு ஐந்து கூடப்
பரிசாகக் கிடைத்திருக்கும். மு.வ வின் முதல் நாவலான-எதிலும் வெளியாகாமல் நேரடியாகவே நூலாகப் பிரசுரமான - `கள்ளோ காவியமோ?`தான் அதிகமும் பரிசளிக்கப் பட்டது. அந்தக் காலகட்டத்தில் அமோக விற்பனை கண்டு சாதனை படைத்த நூல். ஒவ்வொரு அத்தியாயமும் கதைத் தலைவனும் தலைவியும் மாறி மாறிக் கதை சொல்லும் புதிய யுக்தியோடு எழுதப் பட்டதோடு சாதாரண தாம்பத்ய சச்சரவு எப்படிப் புரிந்து கொள்ளாமையால் பெரிய சிக்கலை வாழ்க்கையில் ஏற்படுத்துகிறது என்பதை இனிய புதுமையான தமிழ் நடையில் மு.வ அற்புதமாகச் சொல்லியிருந்தார். உயர்நிலைப் பள்ளி வயதிலும், கல்லூரி வயதிலும் பின்னர்
திருமணம் ஆனபிறகும் பலமுறை அதை நான் படித்திருக்கிறேன்.மண்ணுக்கேற்ற மணம் போல வயதுக்கேற்ற சுவையுடன் `
நவில் தொறும் நூல் நயம்` என்பதற்கு எடுத்துக் காட்டாக எனக்கு அந் நாவல் வெவ்வேறூ அர்த்தங்களைத் தந்து
மகிழ்வூட்டியது. அப்போது வங்காள நாவல்கள் அதிகமும் த.நா.குமாரசாமி. அ.கி. நடராஜன் போன்றோரால் மொழிபெயர்க்கப் பட்டு தமிழ் வாசகர்களைப் பெரிதும் ஈர்த்தன. தாகூர், சரத்சந்திரர், பக்கிம்சந்திரர் நாவல்கள்- அனேகமாக அப்போது வெளியான எல்லா வங்காள நாவல்களையும் புகழ் பெற்ற `ஆனந்த மடம்` உட்பட அந்த வயதில் பள்ளி இறுதி வகுப்புக்கு முன்னரே படித்து விட்டேன். எட்டாம் வகுப்பில் படிக்கும் போது 1948-1949 களில் நிறைய குழந்தைப் பத்திரிகைகளான வை.கோவிந்தனின் `அணில்`, அழ.வள்ளியப்பாவின் `பாலர்மலர்`, திஜ.ர வின் `பாப்பாமலர்`, தமிழ்வாணனின் `கல்கண்டு`, வானதி திருநாவுக்கரசின் `ஜில்ஜில்`, குமுதம் வெளியீடான `ஜிங்லி`, ஆர்வி ஆசியராக இருந்த `கண்ணன்`, மற்றும் டமாரம், குருவி, யுவன் என்று அப்போது எத்தனை அருமையான பிரசுரங்கள்- என் தீராத வாசிப்பு வேட்கைக்கு விருந்தளித்தன. எல்லாம் ஒரு அணா. அரையணா விலையில்! `யுவன்` என்ற கையகலப் பதினாறு பக்கப் பத்திரிகை காலணாதான். ஒரு அணா, இரண்டணா விலையில் கையகலத்துக்கு தமிழ்வாணனும் வானதி திருநாவுக்கரசும் வெளியிட்ட சிறுசிறு கதைப் புத்தகங்கள் என்னைப் போல எத்தனையோ பேர் பின்னாளில் எழுத்தாளராகப் பரிணாமம் கொள்ள வித்திட்டன என்பதை எண்ணும்போது அந்த நாட்களுக்கு மனம் ஏங்குகிறது. இதன் தாக்கம்தான் பள்ளி இறுதி வகுப்பிலேயே நான் எழுத்தாளனாக உருவானதற்கும் என் முதல் கதையே பத்திரிகையில்
பிரசுரமானதற்கும் காரணமாக அமைந்தது.

- தொடர்வேன்.

- வே.சபாநாயகம்.

Posted at 01:27 pm by Sabanayagam
Make a comment

Thursday, December 11, 2003
கணையாழி அனுபவம் - தொடர்ச்சி

சென்னை செல்லும்போதெல்லாம் திரு. கஸ்தூரி ரங்கன் அவர்களைச் சந்தித்துப் பேசுவேன். ஆரம்பத்தில் அவர் அதிகமும் நெருக்கமாகப் பேசியதில்லை. என் குறுநாவல்கள் கணையாழியில் பிரசுரமாகத் தொடங்கிய பிறகுதான் மனம் விட்டுப் பேச ஆரம்பித்தார். தி. ஜா நினைவுக் குறுநாவல் போட்டியில் பரிசுபெற்ற என் `இனியரு தடவை` என்ற குறுநாவலை மனந்திறந்து
பாராட்டினார். அவருடன் பழகியவர்க்குத் தெரியும்- பாரபட்சம் காட்டாமல், இளையவர் முதியவர் என்றில்லாமல் ஒரு படைப்பு பிடித்திருந்தால் மேட்டிமை இல்லாமல் பாராட்டிப் பேசும் உயர்ந்த பண்பாளர். நான் மூன்று தடவை தொடர்ந்து தி.ஜா. நினைவுக் குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றேன். கணையாழியால் அவருக்குப் பெருத்த நஷ்டமே தவிர லாபமில்லை. அந்த நிலையிலும் படைப்புகளுக்கு சன்மானம் வழங்கி வந்தார். சிற்றிதழ்களில் படைப்பாளிக்குப் பணம் கொடுத்தவர் அவர் மட்டுமே என்
நினைக்கிறேன். கணையாழியில் வெளியான என் ஒரு கவிதைக்கும் 4 குறுநாவல்களுக்கும் சன்மானம் கிடைத்திருக்கிறது. தி.ஜானகிராமன் என் ஆதர்ச எழுத்தாளர். கதை முழுவதையும் ஆசிரியன் குறுக்கீடு இன்றி பாத்திரங்களின் உரையாடல் களாலேயே அலுக்காமல் நடத்திச் செல்லும் அவரது அற்புதத் திறன் என்னைப் பரவசப்படுத்தும். அதன் தாக்கம் என் கதைகளில் என்னையறியாமலே வெளிப்பட்டது. அவரது`சத்தியமா` என்ற கதை என்னைக் கிறங்க அடித்தது. அந்த பாணியில் `இனியரு தடவை` குறுநாவலை முழுதும் உரையாடல்களாலேயே அமைத்தேன். தி. ஜாவின் எழுத்தில் மோகம் கொடிருந்த எனக்கு அவர்
பெயரால் நடத்தப் பட்ட போட்டியில் பரிசு கிடைத்ததைப் பெரும்பேறாகவே கருதுகிறேன். அதைவிடப் பெரிய பேறு கணையாழியின் பரிணாம வளர்ச்சியை, தொடர்ந்து 5 ஆண்டுகள் எழுதியது. தொடர்ந்து அவ்வளவு நீண்ட காலம் கணையாழ்யில் எழுதியது நானாகத்தான் இருக்கும். கஸ்தூரிரங்கன் பொறுப்பில் இருந்திருந்தால் இன்னமும் அத் தொடரை தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பேன்.


1965ல் தொடங்கப் பட்ட கணையாழிக்கு 1995ல் 30 ஆண்டு முடிந்திருந்தது. இவ்வளவு நீண்ட காலம் எந்த இலக்கியப் பத்திரிகையும் விடாமல் நடந்ததாக வரலாறு இல்லை. 1995 ஏப்ரலில் நான் கி.க அவர்களைச்சந்தித்த போது முப்பது ஆண்டுகள் முடிந்ததையட்டி சில புதிய அம்சங்களை வெளியிட விரும்பினார். அதில் ஒன்றாக கணையாழியின் வளர்ச்சியைச்
சொல்லும்படி முதல் இதழிலிருந்து ஒவ்வொரு இதழாகத் தொடர்ந்து விமர்சித்து எழுதும்படி என்னைக் கேட்டுக் கொண்டார். 25ஆண்டு முடிந்தபோது மாலன் அவர்கள் `கணையாழி-25 என்று ஒரு தொடர் எழுதினார். நான் அதைக் குறிப்பிட்டபோது,`அது ஒட்டு மொத்தமான விமர்சனம். இப்போது நீங்கள் இதழ் இதழாக எழுதுங்கள்` என்றார். `மாதம் ஒரு இதழ் என்றால் இன்னொரு 30 வருஷம் ஆகுமே சாத்யமா? அதற்குப் பதிலாக ஒரு மாதத்துக்கு ஒரு ஆண்டு என்று எழுதினால் 30 மாதங்களில் முடித்து விடலாமே` என்றேன். `அதனால் என்ன/ முடிந்தவரைஎழுதலாம். மாதம் ஒரு இதழ் என்றே எழுதுங்கள்` என்றார்.

இதை மாலன்கூட அவர் தினமணி ஆசிரியராக இருந்தபோது தினமண் கதிரில் எழுதினார். `படித்ததில் பிடித்தது- படித்ததில் இடித்தது` என்ற தலைப்பில் வாரா வாரம் கட்டம் போட்டு எழுதிய போது, ஒரு வாரம் `படித்ததில் இடித்தது` என்ற பகுதியில் `கணையாழியில் மாதம் ஒரு இதழ் என்று தொடங்கியது முதல் எழுதுகிறார்கள். அப்படியானால் இது வந்த இதழ்கள் எழுத 30 ஆண்டுகள் ஆகும். அதற்குள் அடுத்து 30 ஆண்டுகள் ஆகியிருக்கும். எப்படி- இடிக்கிறதே!` என்று எழுதினார். ஆனாலும் கி.க விரும்பியபடியே மாதம் ஒரு இதழ் வீதம் எழுதினேன். அட்டையையும் சுவையான பகுதிகளையும் ஒளி நகல் எடுத்து இணைத்து இதழ் முழுதும் ஒரு அம்சமும் விட்டுப்போகாமல் எழுதினேன். அதற்கு நல்ல வரவேற்பிருந்தது. கணையாழியின் ஆரம்ப காலம் முதல் அது சாதித்ததை இளைஞர்கள் அறிந்து கொள்ள `கணையாழியின் பரிணாம வளர்ச்சி` என்ற அத் தொடர் உதவியது. அதைப் படித்த ஆய்வு மாணவர்கள் பலர் தொடர்பு கொண்டு பயன் பெற்றார்கள். மயிலாடுதுரையில் ஒரு ஓய்வு பெற்ற அஞ்சல் துறை அதிகாரி 1967ல் நடைபெற்ற அகில இந்திய அஞ்சல் துறை மாநாடு பற்றிய அறிக்கை வந்ததை நான்
குறிப்பிட்டதைப் பார்த்துவிட்டு 30 ஆண்டு கழிந்தபின் அதை நினைவு கூர்ந்ததில் நெகிழ்ந்து தான் அதில் பங்கேற்றதைக் குறிப்பிட்டுப் பாட்டி அக் கட்டுரையின் பிரதி கேட்டு எழுதினார். கி.க அவர்களும் `நன்றாக வருகிறது. எனக்கே இதையெல்லம் நாமா செய்தோம்` என்று மலைப்பாய் இருக்கிறது. இ.பா கூடப் பாராட்டினார்` என்றார். அவ்வளவு பெரிய பத்திரிகையாளர் என்மீது நம்பிக்கை வைத்து அப் பெரும் பணியை ஒப்படைத்ததுடன் பாராட்டியும் உற்சாகப்படுத்தினார் என்பது சாதாரண விஷயமா?

ஆனால் அதை சுஜதா கொச்சைப் படுத்தி அவருக்காந `கடைசிப்பக்கத்` தில் ஒருமுறை எழுதினார். நான் ஒவ்வொரு இதழிலும் அவரது கடைசிப்பக்கத்தைக் குறிப்பிட்டு ரசமான பகுதிகளை எடுத்துத் தந்து பாராட்டியே எழுதி வந்திருக்கிறேன். ஒரு மாதம் ` பெர்யாரின் ஆணவப் பேச்சு` என்ற தலைப்பில் கடைசிப்பக்கத்தில் `தமிழ் காட்டுமிராண்டி பாஷை` என்று அவர் சொன்னதை விமர்சித்து எழுதப்பட்டிருந்தது. அடியில் `தொடித்தலை விழுத்தண்டினார்`என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வழக்கமாக கடைசிப்பக்கம் எழுதுவது சுஜாதா என்பதால் நான் அதை உறுதி செய்து கொள்ளாமலே- கி.க அல்லது சுஜாதாவைத்தான் கேட்டிருக்கமுடியும். அதற்கான நேரமோ சந்தர்ப்பமோ இல்லாத நிலையில்- சுஜாதா தான் அதை எழுதினார் என்று எழுதிவிட்டேன். அது நானில்லை என்று அவர் மறுப்புக் கொடுத்ததோடு நிறுத்தி இருக்கலாம். அவர் எழுதினார்: `சபாநாயகம் 30 ஆண்டு கணையாழி அவரிடம் உள்ள ஒரே தகுதியில் நக்கலாக கணையாழியில் எது வந்தாலும் அது நான் எழுதியது தான் என்று என் தலையில் போட்டு விடுகிறார். சத்தியமாக அதை எழுதியது நான் இல்லை`. நான் அவரது கதை பின்- னும் திறத்திலும் ரசமான நடையழகிலும் மனம் பறிகொடுத்தவன். அவரைக் குறைகூறி நான் ஏதும் எழுதிவிடவில்லை. ஆனாலும் ஏதோ ஈகோ பிரச்சினை-அப்படிக் கொச்சைப்படுத்தி எழுதிவிட்டார். பிறகு விசாரித்ததில் `தொடித்தலை
விழுத்தண்டினார்` என்ற பெயரில் எழுதியது நா.பா என்று கேள்விப் பட்டேன். நான் சுஜாதாவுக்கு `நான் உங்கள் ரசிகன். உறுதிப் படுத்திக் கொள்ளாமல் எழுதியது தவறுதான். ஆனால் உங்களை மலினப்படுத்தும் நோக்கத்தில் நான் அதை எழுதவில்லை` என்று எழுதினேன்.அவரிடமிருந்து பதில் வரவில்லை. அதிலெனக்கு வருத்தமும் இல்லை. நான் இன்னும் அவரது ரசிகன்தான்.


பொருளதார நெருக்கடி அதிகமாகி தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் `தசரா` தமன் பிரகாஷ் அதை ஏற்று நடத்த முன் வந்தபோது எப்படியாவது தான் தொடங்கியது இல்லாமலே போவதைவிட யாராவது நடத்தட்டுமே என்று சிறிதும் வருத்தமின்றி கி.க கொடுத்துவிட்டார். அதற்குப்பின்னும் நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். கி.க போல அல்லாமல் என் கட்டுரைகளில் அவ்வப்போது வெட்டு விழுந்தது. 2 பக்கம் ஒரு பக்கமாகக் குறைக்கப்பட்டது. கி.க தொடங்கியதை நிறுத்தத் தயங்கியமாதிரி தெரிந்தது.அடுத்து ஒரு மாதம் பெட்டிச் செய்திபோலச்சுருக்கி என் பெயரும் இல்லாமல் அரைப் பக்கத்தில் வந்தது. அதற்கு மேலும் பொறுக்காமல் நான் ஆசிரியர்க்கு,` என் கட்டுரையைத்தொடர விருப்பம் இல்லையென்றால் நேரடியாகவே சொல்லிவிடுங்கள்.எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் இப்படி மலினப்படுத்த வேண்டாம்` என்று எழுதினேன். `இல்லை. நீங்கள் எப்போதும் போலவே எழுதலாம். அப்படியே வெளியாகும் ` என்று வருத்தம் தெரிவித்து பதில் வந்தது.
அப்புறம் தொடர்ந்து ஏப்ரல் 2000 வரை எழுதினேன். அம்மாதக்கடைசியில் உதவி ஆசிரியரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. ` கணையாழியில் புதிய பகுதிகள் வரவிருப்பதால் தங்களது தொடரை தற்போதைக்கு நிறுத்தி வைக்க ஆசிரியர் குழு எண்ணுகிறது. உங்கள் ஒப்புதலை எதிர்பார்க்கிறோம்`. ஒப்புதல் இல்லை என்றா சொல்லமுடியும்? `ஆகா! அப்படியே செய்யலாம்`
என்று எழுதினேன். இப்படி 58 மாதங்கள் தொடர்ந்து வந்த `கணையாழியின் பரிணாம வளர்ச்சி` நிறுத்தப்பட்டது. கி.க அவர்களுக்கும் தொடர்ந்து அதைப் படித்து வந்தவர்களுக்கும் வருத்தந்தான். ஆனால் பத்திரிகை நடத்துபவர்கள்
விருப்பம் அது. அதில் வருத்தப்பட என்ன இருக்கிறது? என்னைப் பொறுத்தவரை அத் தொடர்மூலமே நான் இலக்கிய உலகில் பெரிதும் அறியப்பட்டேன் என்பதில் மன நிறைவு கொள்கிறேன்.

பின்னர் கி.க அவர்கள் `அம்பலம்` மூலம் கணையாழியின் 30 ஆண்டு இதழ்களையும் இணைய தளத்தில் கொண்டுவர இருப்பதால் 30 பைண்டுகளையும் அனுப்பி வைக்கும்படியும் வேலை முடிந்ததும் பத்திரமாக திருப்பி அனுப்புவதாகவும் கேட்டார்கள். பிரிய மனம்ல்லை என்றாலும் அதன் சாசுவதம் கருதி அனுப்பி வைத்தேன். கொஞ்சம் வலைஏற்றம் நடந்த பிறகு ஏதோ காரணத்தால் அம் முயற்சி கைவிடப்பட்டது. பிறகு கலைஞன் பதிப்பகம் தொகுப்பாக வெளியிட விரும்பிக் கேட்டதால் கி.க அவர்கள் என்னையே முதல் பத்தாண்டுகளைத் தொகுத்துத் தர வேண்டினார். அதன்படி 1965 முதல் 1974 வரை முதல் தொகுப்பாக எனது தேர்வில் `கணையாழி களஞ்சியம்`வெளியாயிற்று. தொடர்ந்து 1975 முதல் 1984 வரையிலான 10 ஆண்டு
கள் இ.பா அவர்களது தேர்வில் `கணையாழிக் களஞ்சியம்`-2 வெளியாகி உள்ளது. 3வது தொகுதி 1985 முதல்
1994 வரை என்.எஸ்.ஜெகந்நாதன் அவர்களது தேர்வில் வெளியாக உள்ளது.


அதே கலைஞன் பதிப்பகத்தார் இப்போது `தீபம் இதழ்த் தொகுப்பை` 2 பாகங்களாக என் தேர்வில் கொணர இருக்கிறார்கள். முதல் தொகுப்பு அச்சாகிக் கொண்டிருக்கிறது. 2வது தொகுப்பைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். இலக்கிய ஆர்வலர்களுக்கு இதுவும் பெருவிருந்தாக அமையும்.

- வே.சபாநாயகம்.

Posted at 01:22 pm by Sabanayagam
Make a comment

Tuesday, December 09, 2003
சிற்றிதழ் அனுபவம்எனக்கு அறிமுகமான சிற்றிதழ் வ.விஜயபாஸ்கரனின் `சரஸ்வதி` தான். 1957ல், கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிர உறுப்பினராக இருந்த என் மாமா மகன் திரு.ஜே.எம்.கல்யாணம் (பிரபல வழக்கறிஞர் கே.எம். விஜயனின் அப்பா) அவர்கள்தான் `சரஸ்வதி`யை எனக்கு அறிமுகம் செய்தவர். அவர் அப்போது ஜனசக்தி பிர்ஸ்ஸில் மேலாளராக இருந்தார். ஜெயகாந்தன் ஜனசக்தியில் பணியாற்றியதும் அப்போதுதான். சரஸ்வதி தொடங்கி அப்போது மூன்று ஆண்டு போல ஆகியிருந்தது. கட்சியின் இலக்கியப் பத்திரிகையான சரஸ்வதியின் இதழ்கள் சிலவற்றைக் கொடுத்து படிக்கச் சொன்னார்.

நான் அப்போதுதான், விகடனின் முதல் மாணவர் திட்டத்தில் கதை வெளியாகி அறிமுகமாகி உத்வேகத்தொடு எழுதத்
தொடங்கியிருந்தேன். அதனால் என்னை ஊக்குவிக்க சரஸ்வதியை அறிமுகப்படுத்தியதுடன் என்.சி.பி.ஹெச்சில், மலிவுப் பதிப்பில் வந்த பிரபல ருஷ்ய எழுத்தாளர்களின் நாவல்களை வாங்கி கொடுத்துப் படிக்கச்சொன்னார். ஜெயகாந்தனின் இலக்கியத்திறனை இனங்காட்டியவரும் அவர்தான். சரஸ்வதியில் அப்போது ஜெயகாந்தனும் சுந்தரராமசாமியும் அற்புதக் கதைகளை எழுதினார்கள். அக்கதைகள் என்னுள் பெரிய இலக்கிய எழுச்சியை உண்டாக்கின. உடனே சரஸ்வதிக்கு சந்தா செலுத்தினேன். இதழ் 0-25 பைசாதான். ஆண்டு சந்தா 3 ரூ. அது முதல்,சரஸ்வதி நின்று போகிற வரை -1961 பிப்ரவரி வரை- தொடர்ந்து விடாமல் வாங்கினேன். ஆனால் சரஸ்வதி தான் தொடர்ந்து கிடைக்க வில்லை. பொருளாதார நெருக்கடியால் விட்டு வ்ட்டு வரும். சமயத்தில் தகவலே இல்லாது போகும். பிறகு திடீரென்று உருவமாற்றம் பெற்று புதுப்பொலிவோடும் புதுப் பிரகடனத்துடனும் வரும். சிற்றிதழ் நடத்துவதின் சிரமங்களை வாசகரும் அறிந்து கொள்ளுபடி சரஸ்வதியின் போராட்டம் இருந்தது. பாராட்டு நிறையக் கிடைத்தும் சந்தாபலம் இல்லாமல் 7ஆண்டுப் போராட்டத்துக்குப் பின் ஒரு நாள் எந்த அறிவிப்புமின்றி நின்றே போனது. அந்த 7
ஆண்டுகளில் சரஸ்வதி சாதித்தவை மறக்க முடியாதவை. என்னைப் பொறுத்தவரை எனக்கு இலக்கியப் பிரக்ஞையை
ஊட்டியதுடன் இன்னொரு இனிய அனுபவத்தையும் தந்தது. அப்போதுதான் நான் கணித ஆசிரியனாக விருத்தாசலம் உயர்
நிலைப் பள்ளியில் சேர்ந்திருந்தேன். எனது இலக்கியப் பிரக்ஞையைப் பகிர்ந்து கொள்ளவும் இலக்கியச் சுவையை
வெளிப்படுத்தவும் உற்ற தோழமை கிடைக்கவில்லை. அதனால் பத்து,பதினோராம் வகுப்புக்களில் என் கணக்குப் பாடம்
போக மற்ற ஓய்வு வேளைகளில் நானே வலிய, ஆசிரியர் வராத வகுப்புக்களைக் கேட்டு வாங்கி அப்போதுதான்
படித்த சரஸ்வதி இதழ்க் கதைகளை- குறிப்பாக ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி கதைகளை நான் ரசித்தபடியே
உணர்ச்சிகரமாக என் மாணவர்க்குச் சொல்லுவேன். இப்படித்தான் புதுமைப் பித்தனையும், பாரதியையும், கவிமணியையும்
ஆவேசமாக என் மாணவர்க்கு அறிமுகப் படுத்தி என் இலக்கியத் தினவுக்கு வடிகால் தேடிக் கொண்டேன். அப்போது,
இன்றைய பிரபல கவிஞரான த. பழமலய்யும் கவிஞர் கல்பனாதசனும் என் மாணவர்களாக இருந்தவர்கள். அப்போது
என்னால் பெற்ற இலக்கிய எழுச்சியே தனது வளர்ச்சிக்கு மூலம் என்று பழமலய் இன்றும் தன் நூல்களிலும் பேச்சுக்களிலும்
குறிப்பிடத் தவறுவதில்லை. இது சரஸ்வதியால் கிட்டியது.

பிறகு சரஸ்வதியில் வெளியாகிற சிறு பத்திரிகை வ்ளம்பரங்களைப் பார்த்து விட்டால் போதும் உடனே அதன் ஆயுட்காலம் பற்றி யோசிக்காமல் சந்தா கட்டிவிடுவேன். அப்படி கட்டியவைகளில் தொடர்ந்து கிடைத்தவையும் உண்டு, ஒரே இதழுடன் நின்று போனவையும் ஏராளம். ஆனால் இடையிடையே சிறிது தள்ளாடினாலும் இறுதிவரை ஏமாற்றம் தராமல் நிறைவளித்தவை- ஒரே சமயத்தில் 1965ல் தொடங்கப்பட்ட `தீபம்`, `கணையாழி`இரண்டும்தான். அவைகளின் முதல் இதழ் முதல் சேகரம் செய்ய- கொஞ்சம் தாமதமாகத்தான் அவை பற்றி அறிய நேர்ந்ததால்- மிகவும் சிரமப்பட நேர்ந்தது. சென்னை வரும்போதெல்லாம் தீபம்,
கணையாழி காரியாலயங்களுக்கு தவறாது விஜயம் செய்து, விட்டுப்போன இதழ்களை வெறியோடு சேகரித்தேன். தீபம் திருமலையும் கணையாழியின் சென்னைப் பொறுப்பாசிரியராயிருந்த அசோகமித்திரன் அவர்களும் ஏஜண்ட்களுக்கெல்லம் எழுதி மிகப் பிரையாசைப்பட்டு என் அந்த யக்ஞத்துக்குப் பேருதவி புரிந்தார்கள். இந்த நேரத்தில் அவர்களை நன்றியோடு நினைவு கூரக் கடமைப்பட்டிருக்கிறேன். அப்படிச் சேகரித்தவைகளை ஆண்டுவாரியாக பைண்டு செய்து வைத்ததுதான் இன்று கணையாழித் தொகுப்பும், தீபம் தொகுப்பும் வர உதவியாக உள்ளது.

தொகுத்த விபரம் அடுத்த மடலில்.......

-வே.சபாநாயகம்.


Posted at 06:46 pm by Sabanayagam
Make a comment

Previous Page

Next Page