Dynamic Encoded Unicode Tamil Blog<< June 2019 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01
02 03 04 05 06 07 08
09 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30
Contact Me

If you want to be updated on this weblog Enter your email here:

Blogdrive


Sunday, December 07, 2003
நினைவுத்தடங்கள் - 4அப்பாவுடன் தினமும் போகிற சிவன் கோவிலுக்குப் பக்கத்தில் ஒரு தச்சாசாரியின் வீடு இருந்தது. அவர் கிராமத்துத் தச்சு வேலை தவிர மரத்தில் சாமி சிலைகளும் சுதை வேலைகளும் செய்பவர்.எங்கள் ஊர் பாரத பூசாரியும் அவர்தான். திரௌபதி அம்மன் கோவிலில் உள்ள பஞ்ச பாண்டவர் சிலை எல்லாம் அவர் செய்தது தான். சிவன் கோவில் ரிஷப வாகனம் மயில் வாகனம், அன்னப் பட்சி எல்லாம்கூட அவர் செய்ததுதான். ரிஷப வாகனம் செய்தபோது அருகே இருந்து பார்த்த ரசித்தது இன்னும் மறக்கவில்லை. அதுதான் எனக்குள் இருந்த கலைஉணர்வைத் தூண்டியது எனலாம். முதல்நாள் பார்த்தால் வெறும் கட்டைகளாகக்கிடப்பவை மறுநாள் ஒரு சிற்பவடிவின் முழுமையற்ற தோற்றம் கொண்டிருக்கும். நான் பள்ளிவிட்ட நேரம் போக அங்கேதான் இருப்பேன். ரிஷப வாகனம் செய்தபோது நான் முழுதும் அருகிருந்து பார்த்திருக்கிறேன். முதலில் ரிஷபத்தின் தலை பிறகு உடல், கால்கள் என்று தனித்தனியாய் உருவாக்கிப் பின் இணைத்து பீடத்தில் பொருத்தி, திமிறிக்கொண்டு பாயத் தயாராய் நிற்கிற ஒரு கம்பீரமான ரிஷபமாய் ஆன அற்புதம் என்னுள் பரவசத்தை ஏற்படுத்தியது. கழுத்தில் சலங்கைகள் மாலையாகத் தொங்க சின்னச் சின்ன மரசலங்கைகளைக் கடைந்து தைத்து மக்குவைத்து வண்ணம் பூசியது எல்லாம் என் கலாரசனைக்கு மேலும் எழுச்சி தந்தது. அப்போது அவர் தீட்டிய வண்ணத்தின் வாசனை கூட இன்று நினைக்கும்போது நாசியில் மணக்கிறது. சில நினைவுகளுடன் அந்த நேரத்து வாசனையும் உடன் உணர்வது எனக்கு அடிக்கடி நேரும்.

அப்புறம் விடுமுறையின்போது என் மாமா வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம் நான் உடனே செல்வது நிறைய ரவிவர்மாவின் ஓவியங்கள் மாட்டியிருந்த ஹாலுக்குத்தான். என் மாமா பெரிய ரசிகர். ரவிவர்மாவின் புகழ்பெற்ற ஒவியங்களை எல்லாம் வாங்கி காலரிஹால் போன்ற பெரிய கூடத்தில் மாட்டி வைத்திருந்தார். இடுப்பளவு உயரமிருந்த அந்த பகீரதன் தவம், தமயந்தியும் அன்னமும், ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் இன்னும் பல அற்புத வண்ண ஓவியங்கள் பார்க்க அலுக்காதவை. அவை என் ஓவியரசனையைத் தூண்டி விட்டன. இதெல்லாம்தான் நான் பின்னாளில் ஓவியனாகப் பரிணமிக்கவும் காரணமாய் இருந்தன. சின்ன வகுப்புகளிலும் பின்னர் கல்லூரி வகுப்புகளிலும் பாடம் நடக்கும்போதே ஆசிரியர்களை கோட்டோவியமாக வரைந்து அதற்காகத் தண்டனையும் பாராட்டும் பெற்றிருக்கிறேன்.

பின்னர் அறுபதுகளில் நான் கணித ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் பள்ளி இலக்கிய மன்றத்துக்கு பேச வந்த கி.வா.ஜ, அ.சிதம்பரநாதன் செட்டியார், தேவநேயப்பாவணர், உலகஊழியனார், கி.ஆ.பெ.விசுவநாதம், மயிலை சிவமுத்து, குன்றக்குடி அடிகளார் எல்லோரையும் சில்பி போல நேரே பார்த்து வரைந்து அவர்களிடம் கையப்பம் பெற்றதை இன்னும் பொக்கிஷமாய்ப் பேணி வருகிறேன். விகடனில் பார்த்த சில்பி.,மாலியின் ஓவியங்கள் என் கலைரசனைக்குத் தூண்டுதலை அளித்தன. கையெழுத்திட்டபோது உலகஊழியனார் தத்ரூபமான தன் படத்தைப் பார்த்து நெகிழ்ச்சியுற்று மேடையிலேயே கட்டித்தழுவியதும் `ஓவியம் உணர்ந்தவன் இறையனக் கருதப்படுவான்` என்று அவரது படத்தின் மீது எழுதி கையப்பமிட்டுத் தந்ததும் என் கலை ரசனை பெற்றுதந்த பேறுகளாகும். இது போலவேதான் நான் எழுத்தாளனாகப் பரிணாமம் கொள்ளவும்
அந்த வயதில் அனுபவங்கள் கிட்டின. எழுத்தாளனாகு முன் நிறைய வாசிக்கவும் துவக்கக்கல்வி முடிந்து நடுநிலைப் பள்ளி வந்ததும் தூண்டுதல்கள் கிடைத்தன.

- தொடர்வேன்.

வே.சபாநாயகம்.

Posted at 07:38 pm by Sabanayagam
Comments (1)

Monday, December 01, 2003
நினைவுத்தடங்கள் - 3அது இரண்டாவது உலக மகாயுத்தம் நடந்து கொண்டிருந்த காலம். 1939-45. எல்லாமே விலை ஏறியதோடு பொருட்களுக்கும் தட்டுப்பாடு. ரேஷன் அமுலுக்கு வந்தது. பேப்பர் கிடைக்காமல் பாடம் பண்ணப்பட்ட வாழைச்சருகுகளில் கல்யாண அழைப்பிதழும் சினிமா நோட்டீஸ்களும் அச்சானதைப் பார்த்திருக்கிறேன். யுத்தவேலைகளுக்காக காண்டிராக்ட் எடுத்தவர்களும், இரும்பு சிமெண்ட் வியாபாரம் செய்து பொருட்களைப் பதுக்கி விற்றவர்களும் ரேஷன்கடையெடுத்தவர்களும் கொள்ளை லாபம் ஈட்டி பெரும் பணக்காரர்கள் ஆனார்கள். சாலைகளில் கிடந்த மாட்டு லாடங்களினால் சரக்குலாரிகளின் டயர்கள் பக்ஞ்சர் ஆகி டயர் கிடைக்காத சிரமம் ஏற்பட ` ஒரு லாடத்துக்கு காலணா தரப்படும் ` எண்று தண்டோரா போட்டார்கள். ஒரு ரூபாய்க்கு 16 அணா, ஒரு அணாவுக்கு 4 காலணா. காலணாவுக்கு அப்போது மதிப்பு அதிகம். ஒரு அணா இருந்தால் 4 பெரிய இட்டிலிகள் சாப்பிட்டுக் காலை ஆகாரத்தை முடித்துக்கொள்ளலாம். அதனால் மக்கள் லாடங்களைச் சேகரித்துப்
பணம் பண்ணினார்கள். நான் ஆரம்பக் கல்வி பெற்றது,எங்கள் ஊரில் லிங்காயத் இன ஆசிரியர் ஒருவர் நடத்தி வந்த தனியார் பள்ளியில். அப்போதெல்லாம் லிங்காயத் என்கிற வீரசைவர்கள்தான் கிராமங்கள் தோறும் திண்ணைப் பள்ளிகளை நடத்தி வந்தார்கள். எங்கள் ஆசிரியர் மூன்று தலைமுறைகளாக எங்கள் ஊரில் கற்பித்தவர். அவருடைய அர்ப்பணிப்பும் கல்விமுறையும் இன்று நம்ப முடியாதது. அவர்தான் என் முதல் கதைக்கும் முதல் நாவலுக்கும் கதாநாயகர். இன்று நான் பிழையின்றித் தமிழ் எழுதுவதும் தமிழறிவு பெற்றிருப்பதும் அவரால்தான். அந்த வயதில் எங்களுக்கு யுத்தம் பற்றியும் அதில் பங்கேற்ற நேசநாடுகள் பற்றியும் அச்சநாடுகள் -ஜப்பான், ஜர்மனி- பற்றியும் சொன்னவர். செம்பழுப்பு வண்ணத்தில்- செப்பியா நிறம்- வெளியாகிய யுத்தசெய்திப் பிரசுரங்களை பக்கத்து நகரத்திலிருந்து கொண்டுவந்து காட்டி அவ்வப்போதைய யுத்த நிலவரங்களைச் சொன்னவர். பள்ளிக்கூட வெளிச்சுவற்றில் ஒட்டப்பட்ட அந்தப் பிரசுரங்களில் புகை மூட்டத்திற்கிடையே டாங்கிகளையும் அவற்றிலிருந்த பீரங்கிகளிலிருந்து நெருப்பும் புகையும் சூழ்வதையும் பார்த்து சிலிர்த்திருக்கிறேன். சிறுத்தையின் வேட்டைக் கண்களை நினைவூட்டும்படியான கூர்மையான தொலைதூரப் பார்வையும், இடப்பக்கம் வகிடெடுத்து வலப்புறம் தூக்கிவாரிய கிராப்பும், கம்பளிப்பூச்சி மாதிரி மூக்கினடியில் தொற்றிகொட்டிருக்கும் முரட்டுக் கட்டைமீசையும் வலது தோட்பட்டையில் ஸ்வஸ்த்திக் சின்னமுமாய் கையுயர்த்தி நிற்கிற ஹிட்லரின் படத்தை அப்பிரசுரங்களில் பார்த்தது இன்னும் கண்முன்னே நிற்கிறது. என் கலையுணர்வும் அந்த வயதில்தான் பரிச்சயம் கொண்டது.
- தொடர்வேன்.
வே.சபாநாயகம்.


Posted at 05:01 pm by Sabanayagam
Make a comment

Wednesday, November 26, 2003
நினைவுத்தடங்கள் - 2


    நாங்கள் சைவ வேளாளர்கள்; பரம்பரை பரம்பரையாய் சிவனை வழிபடுபவர்கள். சுத்த சைவம்.அப்பா இளைமையிலேயே சிவதீட்சை பெற்று, தினமும் புற்று மண்ணால் லிங்கம் செய்து ஒரு மணிக்கு மேலாக பூஜை செய்துவிட்டுத்தான் காலை ஆகாரமே உட்கொள்ளுவார்கள். காலை 11 மணிக்கு சாப்பாடுதான். சிற்றுண்டி இல்லை. ஒருமணி நேர பூஜையில் `உலகெலாமுணர்ந்து ஓதற்கரியவன்...` தொடங்கி,  இசையோடு தேவாரம், திருவாசகம் திருவருட்பா எல்லாம் பாடுவார்கள். குழந்தையிலிருந்தே நான் சற்றுத் தள்ளி அமர்ந்து கண் அகல அப்பாவின் பூஜையைப் பார்த்தபடி,பள்ளியில் சேருகிறவரை அந்த ஒரு மணி நேரமும் உடனிருப்பேன்.


        அப்பாவின் பாடல்களைக் கேட்டுக் கேட்டு, எனக்கு ஐந்து வயதுக்குள்ளேயே அவர் பாடிய எல்லா பாடல்களும் மனப்பாடம் ஆகிவிட்டது. அதல்லாமல் இரவில் சிவதரிசனம் செய்து வந்த பிறகே இரவு உணவு கொள்வார்கள். அவர்கள் சிவன் கோவிலுக்குச் செல்கையில் என்னையும் உடன் அழைத்துப் போவார்கள். பிரகாரத்தைச் சுற்றும்போது தட்சிணாமூர்த்தியையும் சண்டிகேஸ்வரரையும் மற்ற விக்கிரகங்களையும் சம்பந்தப்பட்ட தகவல்களோடு சொல்லுவார்கள். இரவு படுக்கப் போகுமுன் பெரியபுராணத்திலிருந்தும் திருவிளையாடற் புராணத்திலிருந்தும் கதைகளை உணர்ச்சியோடும் காட்சிப் படுத்துதலோடும் இடையிடையே அப்புராணங்களின் பாடல்களைப் பாடி நாடகம் போலச் சொல்லுவார்கள். ஒரு சின்ன பையனுக்கு சொல்வதாக அது இல்லாமல் தனக்காகவே சொல்வதாகவே இருந்தது.


     திருவிளையாடற் புராணத்தில் மாபாதகம் தீர்த்த படலம் என்று ஒரு திருவிளையாடல் உள்ளது. அதில் ஒருவன்  தன் தாயைப் பெண்டாளுவான். தடுத்த தந்தையைக் கொல்வான். அவனுக்குப் பிரம்மஹத்தித் தோஷம் பிடித்துவிடுகிறது. அவன் எங்கே போனாலும் பிரம்மஹத்தி `அய்யோ, அய்யோ` என்று அனற்றியபடி பின் தொடரும்.அந்தக் காட்சியை அப்பா வருணித்தது இப்போது அறுபது ஆண்டுகளுப் பிறகு நினைத்தாலும் சிலிர்ப்பை உண்டாக்குகிறது. அப்படி ஏழெட்டு வயதிற்குள் கற்றவைகளால் தான் நான் இன்று பேச்சிலும் எழுத்திலும் ரசனையுடன் செயல்பட முடிகிறது. அதிலிருந்துதான் கதை
கேட்கிற ஆவலும் வளர்ந்தது. புராணக்கதைகளை என் அப்பாவிடம் கேட்டேன் என்றால் ராஜா ராணிக் கதைகளையும், மாயா ஜாலக் கதைகளையும் -தி.ஜானகிராமனுக்குக் கிடைத்த கண்ணாடிப் பாட்டி மாதிரி எனக்குக் கிடைத்த என்னைவிடப் பத்து வயது மூத்த-வயதுக்கு வந்து திருமணத்துக்குக் காத்திருந்த என் மாமா மகளிடமிருந்து கேட்டேன். அலுத்துக் கொள்ளாமல்
அன்று அவர் சொன்ன கதைகள் தான் இன்று நான் கதை எழுதுவதற்கு உரமாக இருந்தன எனத் தோன்றுகிறது.


அப்புறம் என் அப்பா வாங்கிய பத்திரிகைகளில் படிக்கக் கிடைத்த குழந்தைக் கதைகளும் என்னை ஈர்த்தன. என் அப்பா அந்தக்காலத்தில் ஜஸ்டிஸ்கட்சி அனுதாபியாய் இருந்ததால் அக்கட்சியின் பத்திரிகை எங்கள் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தது. தினமணிசுடர், திராவிடநாடு பத்திரிகை அளவில் நீளவாட்டில் அந்தப் பத்திரிகை இருக்கும். அந்தச்    
சின்ன வயதில் அரசியல் தெரியாது என்றாலும் ஜஸ்டிஸ் கட்சியின் முக்கிய தலைவருள் ஒருவரான பன்னீர்செல்வம் அவர்கள் விமான விபத்தில் இறந்ததை அட்டையில் பெரிதாக -கனத்தமீசையும் கோட்டும் டையுமாய் கம்பீரமாய்க் காட்சி தரும் அவரது படத்தைப் போட்டு இரங்கல் தெரிவித்திருந்தது அப்படியே இப்போதும் கண்ணில் தெரிகிறது. அந்தப் பத்திரிகை யில்
குழந்தைகளுக்கான பகுதி வரும். அப்பா சொல்லாமலே அதில் வந்த கதைகளைப்   படித்திருக்கிறேன். ஆண்டு பல ஆன
பின்னும் அதில் பார்த்த கதைப்படம் இன்னும் மனதில் பசுமையாய் நிற்கிறது. கடல் பற்றி எரிவதாகவும் தீயை அணைக்க ஓடுவதாகச் சொல்லியபடி அக்குள்ல் வைக்கோல் திரையுடன் ஓடுகிற நரியின் படத்தைப் பார்த்தது மட்டும் நினைவிருக்கிறது. அதுதான் நான் பத்திரிகையில் முதன் முதலில் கதை படித்தது என்று நினைக்கிறேன்.


அப்புறம் விடுமுறையில் என் பெரியம்மா வீட்டுக்குப் போகும்போதெல்லாம் அவர்கள் வீட்டில் வாங்கிவந்த ஆனந்தவிகடன் பாப்பா மலரில்- தனிப் பகுதியாக இள நீலம் அல்லது இளஞ்சிவப்பு வண்ணத்தாளில் வந்த குழந்தைக் கதைகளும் என்ஆர்வத்தை வளர்த்தன. ஆர்.கே.நாராயணனின் `சுவாமியும் சினேகிதர்களூம்` இந்தப் பாப்பா மலரில்தான் தமிழாக்கம் செய்யபப்பட்டு பின்னாளில் வந்தது. பள்ளிகூடத்துக்கு வெளியே இப்படி என் வாசிப்பு ஆர்வம் வளர்ந்தது என்றால்
பள்ளிக்குள்ளே அந்தக் காலத்து அரசியல் பற்றி தெரிந்து கொள்ள நேர்ந்ததும் அப்போதைய இரண்டாம் உலக மகாயுத்தத்தால் தான்.
                                            - தொடர்வேன்.                  
- வே.சபாநாயகம்.

 

 


Posted at 06:48 pm by Sabanayagam
Comments (1)

Sunday, November 23, 2003
நினைவுத் தடங்கள்

 

ரசனை என்பது ஒரு வரம்; ஒரு கொடை. எல்லோருக்கும் அது பிறவியிலயேயே வாய்த்துவிடுவதில்லை. பயிற்சியால் பலர் அதை அடையலாம். பாரம்பரியமாகக் கூட அனேகருக்கு அது சித்திப்பதுண்டு. பிறவியிலேயே ரசனை வாய்க்கப் பெற்றவர்கள் பாக்யசாலிகள். தி.ஜானகிராமன் ரசனை பற்றி எழுதும்போது, `மதுரைமணி ஒரு அற்புதம் என்றால் மதுரைமணியின் பாட்டைக் கேட்டு ஓடுகிறானே அவனும் கூட ஒரு அற்புதந்தான்` என்பார். எப்படி ஓட முடிகிறது என்பது அவருக்கு வியப்பு.மனிதர்கள் அனைவருக்கும் அது இயல்பாகவே இருக்கவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். `பாட்டின் சுவையதனை பாம்பறியும் என்பார்கள்` என்பார் பாரதி. மாணிக்க
வாசகரது பாடல்களை வியக்கின்ற வள்ளலார்,

         `வாட்டமிலா மாணிக்க வாசக நின் வாசகத்தைக்
         கேட்டபொழுது அங்கிருந்த கீழ்ப்பறவை சாதிகளும்
         வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான
         நாட்டமுறும் என்னில் அங்கு நானடைதல் வியப்பன்றே`

  - என்று ஆறறிவில்லாத ஜீவராசிகளுக்கும் ரசனை இருப்பதைச் சொல்லுகிறார்.


     ரசனை இசைக்கு மட்டுமல்ல-பிற எல்லா கலைகளுக்குமே வேண்டும்தான். அதற்கு ஒரு மனலயம் வேண்டும். தொட்டதில் எல்லாம் தோய்கிற ஒரு மனம் வேண்டும். பார்ப்பதில் எல்லாம் பரவசம் கொள்ளுகிற ஒரு பக்குவம் வேண்டும். பாரதிக்கு அந்த மனலயம் இருந்தது.
அதனால்தான் பார்க்கும் இடங்களிலெல்லாம் கண்ணனின் பச்சைநிறம் நிறம் அவருக்குத் தென்பட்டது; கேட்கும் ஒலியிலெல்லாம் கண்ணனின் கீதம்  இசைப்பதைக் கேட்க முடிந்தது; தீக்குள் விரலை வைத்தால் கண்ணனைத் தீண்டும் இன்பம் கிட்டியது.  அந்த மனலயம்      
கிட்டியதால்தான் கவிமணிக்கு

                         `வண்டியும் அற்புதப் பொருளாம்,
                          வண்டி மாடும் அற்புதப் பொருளாம்
                          மாடு பூட்டும் கயிறும்
                          மனதிற் கற்புதப் பொருளாம்`
     என்று பாட முடிந்தது.


பாரதிதாசனுக்கு அந்த மனலயம் இருந்ததால்தான்
      `ஆலம் சாலையிலே கிளைதோறும்      கிளிகள்
       கூட்டம்தனில் அழகென்பாள் கவிதை தந்தாள்`.


    உங்களுக்கு அழகு உபாசனை வாய்க்குமானால் எங்கும் எதிலும் அழகு தென்படும். எனக்கு அப்படி ஒரு அனுபவம் ஒரு தடவை ஏற்பட்டது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் என் திருமணம் நடந்த புதிதில் கும்பகோணத்தில் என் மாமனாரின் நண்பரின் மகன் திருமணத்துக்கு
அழைப்பு வந்து கலந்து கொண்டேன். பெரிய தனவந்தர் வீட்டுத் திருமணம் அது. அப்போதைய நடைமுறைப்படி திருமணம் முடிந்ததும் இசைக்கச்சேரி நடந்த்தது. மதுரை சோமசுந்தரம் பாட்டு- கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை வயலின். கச்சேரி தொடங்கு முன், பக்கத்தில் பார்த்தேன். இரண்டு இடம் தள்ளி நாகப்பழம் போன்ற கருப்பில் பட்டுப்புடவையும் நகைகளுமாய் ஒரு பெண் வீற்றிருந்தாள். சொள்ளை நாகப்பழம் போல அவளது முகமெங்கும்  அம்மை பொளித்து, பார்க்க விகாரமாய் இருந்தாள். மறுமுறை பார்க்கத் தோன்றவில்லை. மதுரை சோமசுந்தரத்தின்  பாட்டு என்னைப் பரவசப் படுத்தியது. அற்புதகானம் என்னைச் சிலிர்ப்பூட்டியது. மனதில்
ஒரு ரசாயன மாற்றம் நிகழ்ந்தது. எங்கும் எதிலும் அழகே தென்பட்டது. இப்போது அந்தப் பெண்ணைப் பார்த்தேன். அடடா! எத்துணை அழகு அவள்! அவளது கருப்பும் அம்மைத் தழும்புகளும் உதிர்ந்து போயிருந்தன. மகா அழகியாய் அவள் அப்போது எனக்குத் தென்பட்டாள்.

 
அட! இசைக்கு அந்த அற்புத சக்தி உண்டா? ரசனை வரம் கிட்டியவர்களுக்கு அது கிட்டும் என்றே தோன்றியது. எனக்கு அந்த வரம் எப்போது கிட்டியது? நினைவுத் தடத்தில் பின்னோக்கி நடக்கிறேன். அறுபது ஆண்டுகளுக்கு முன் என் ஏழு அல்லது எட்டு வயதில்
ஏற்பட்ட ரசனை நினைவில் புரளுகிறது.

                                - தொடர்வேன்.  ---வே.சபாநாயகம்.       


 


Posted at 07:44 pm by Sabanayagam
Comments (2)

Previous Page