Dynamic Encoded Unicode Tamil Blog<< October 2020 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01 02 03
04 05 06 07 08 09 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Contact Me

If you want to be updated on this weblog Enter your email here:

Blogdrive


Thursday, April 01, 2004
Moving to blogspot

Friends, I am moving to blogspot. Please do visit me there. http://ninaivu.blogspot.com Nandri

Posted at 10:36 pm by Sabanayagam
Make a comment

Wednesday, February 04, 2004
நினைவுத் தடங்கள் - 11எஸ்.எஸ், வாசன் தொடங்கிய `மாணவர் திட்டம்` இப்போதுள்ளதைப் போல மாணவ நிருபர் தேர்வு அல்ல. மாணவர்களது எழுத்தாற்றலை வெளிக் கொணர்வதும் ஓராண்டில் வெளிப்பட்ட மாணவ எழுத்தாளர்களில் இருவரை உதவி ஆசிரியர்களாக நியமிப்பதும் தான் நோக்கம். 1956-57ல் வாரம் ஒரு படைப்பாக 52 வாரங்களுக்கு கதைகள், கவிதைகள் தேர்வு செய்யப் பட்டு வெளிவந்தன. எனது `குழந்தைத் தெய்வம்` என்ற கதை 1957ல் நான் ஆசிரியர் பயிற்சி முடிந்து வெளிவந்த பின் வெளியானது. எல்லாக் கல்லுரி மாணவர்களது படைப்புகளும் வந்தன. அண்ணாமலையில் தொடர்ந்து இரண்டு மூன்று பேர் இதனால் மாணவர்கள் ஆசிரியர்களின் கவனத்துக்கு வந்தார்கள். கதை எழுதுவார்கள் என்று எதிர்பார்க்காதவர்கள்-தட அறியல் துறை இயக்குனராக இருந்து ராஜீவ் கொலைவழக்கில் பிரபலமாகப் பேசப்பட்ட திரு.சந்திரசேகரன்- எனக்கு ஓராண்டு சீனியர்-அதில் ஒருவர். அதைப் பார்த்ததும் எனக்கு நெருக்கமான, நான் அப்போது நிறைய எழுதிக் கொண்டிருந்ததை அறிந்த நண்பர்கள் உற்சாகப் படுத்தி என்னையும் விகடன் மாணவர் திட்டத்திற்கு எழுதத் தூண்டினார்கள். ஆனந்தவிகடன் எழுத்தாளர் என்பது அப்போது - ஏன் இப்போதும் தான்-புருவம் உயர்த்தும் சாதனை. நான் அதுவரை பெரிய பத்திரிகைகளுக்கு எழுதவில்லை. எனவே பயத்தோடு தான், நண்பர்களின் வற்புறுத்தலால் எழுதி அனுப்பினேன். என் பள்ளிப் படிப்பின் போது ஒரு ஐஸ் விற்பவனை தலைமை ஆசிரியர் பள்ளிக்கு அருகில் விற்பதற்குத் தடை விதித்தபோது நான் அவனுக்காக இரக்கப்பட்ட சம்வத்தை வைத்து எழுதிய கதை அது. படித்துப் பார்த்த நண்பர்கள் கதை நன்றாக வந்திருப்பதாகவும் நிச்சயம் வெளியாகும் என்றும் நம்பிக்கையூட்டினார்கள்.


அப்படியே கதையும் விகடனில்,என் போட்டோவுடனும் வகுப்பு கல்லூரி வ்¢வரங்களுடனும் வெளியாகியது. ஆனால் பெருமைப் பட்டுக்கொள்ளவும் நண்பர்களின் பாராட்டைப் பெறவும்தான் வாய்ப்பில்லாது போய்விட்டது. ஏனென்றால் கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகல்லவா கதை பிரசுரம் ஆனது? அனால் அந்த ஏமாற்றம் வேறு வகையில் ஈடுகட்டப்பட்டது. நான் ஆசிரியராகப் பணியேற்ற அன்றுதான் கதை பிரசுரம் ஆனந்தவிகடனில் வெள்¢யாயிற்று. தபாலில் வந்த பிரதியுடன் தான் பள்ளிக்கு முதன் முதலாகச் சென்றேன். முதல் வகுப்பில் நுழைந்ததுமே ஒரு பையன் அவனிடம் இருந்த புது விகடனில் என் கதை வந்துள்ள பக்கத்தை விரித்துக் காட்டி, `இது நீங்க தானே சார்?` என்று கேட்டான். மிகுந்த பரவசமும் பெருமையும் ஏற்பட்டது, ஆனால் மிகவும் குளிர்ந்து போனதாக மாணவர் முன்னிலையில் காட்டிக்கொள்ள விரும்பாமல், `உட்கார்! வகுப்பில் இதெல்லாம் கேட்காதே!` என்று அவனை அடக்கினேன். ஆனால் பணியில் நுழைந்ததுமே கிடைத்த இந்த வரவேற்பு மிகுந்த உற்சாகத்தை அளித்தது.

அந்த ஆண்டு வெளியான படைப்புகளை எழுதிய 52 பேருக்கும் அன்பளிப்பாக விகடனிலிருந்து ஒரு அழகான `பைலட்` பேனா அன்பளிப்பாக வந்தது. அத்துடன் சன்மானம் ரூ.150ம் கிடைத்தது. இரண்டு மாதங்களுக்குப் பின் `உதவி ஆசிரியர்` நியமனத்துக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்த போது மகிழிச்சியால் நான் திக்கு முக்காடிப் போனேன். ஏனேனில் 52 பேரில் 10 பேரைத் தேர்வு செய்து அழைத்திருந்தார்கள் என்பது பூரிப்பை ஏற்படுத்தியது.நான் விரும்ப்¢ய துறையில் பணி கிடைக்கப் போகிறது என்கிற மகிழ்ச்சி வேறு. போகவர பயணப்படியுடன் அழைத்திருந்தார்கள். மிகுந்த நம்பிக்கையுடன் சென்னைக்குப் புறப்பட்டேன்.

சென்னையில் என் உறவினர் ஒருவர்- ஜனசக்தியில் பணியாற்றிக் கொண்டிருந்தவர், `விகடன்¢ல் உனக்குக் கிடைத்தாலும் நீ அதை ஏற்க வேண்டாம், நீ தற்போது அரசாங்க வேலையில் இருக்கிறாய், இது நிலையானது. விகடன் உதவி ஆசிரியர் வேலை வாழ்க்கைக்கு உத்திரவாதமான தல்ல. அதோடு அங்கு உன் எழுத்துக்களை அதிகம் வெளியிட அணுமதிக்க மாட்டார்கள். ஆசிரியப்பணியில் இருந்து கொண்டே நிறைய வெளிப்பத்திரிகைகளில் எழுத முடியும். விகடனில் அப்படி எழுத விடமாட்டார்கள்`-என்று என் உற்சாகத்தை வடியச் செய்தார். அதுதான் யதார்த்தமானது என்றாலும் மனது விகடனில் கிடைத்தால் தேவலை என்றே ஆசைப்பட்டது.


விகடன் அலுவலகத்தில் வரவேற்று சிற்றுண்டி கொடுத்து உபசரித்து மாடியில் இருந்த ஆசிரியர் அறைக்கு அனுப்பி வத்தார்கள். என்னைத் தவிர வேறு யாரும் பேட்டிக்கு வந்திருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை தனித்தனியாக அழைத்திருந்தார்கள் போலும். எஸ்.எஸ்.வாசன் அவர்களே பேட்டி கொடுத்தார். இன்முகத்துடன் வரவேற்று அமரச் செய்தார். என் கதை வந்த விகடன் அவர் கையில் இருந்தது. என்னைப் பற்றி விசாரித்த பின், `ஆசிரயராக இருப்பதால் குழந்தை மனத்தை உணர்ந்து நண்றாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். ஆனால் இந்தத் திட்டம் வேலை இல்லாதவர்க்கு வாய்ப்பளிக்க எண்ணித் தொடங்கப்பட்டது. இப்போது நீங்கள் வேலையில் இருக்கிறீர்கள். அதனால் வேலை இல்லாதவர்க்கு வாய்ப்பளிக்கலாம் அல்லவா?` என்று கேட்டார். கேட்க ஏமாற்றமாக இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல், `சரி சார்! அப்படியே செய்யுங்கள்` என்று விடை பெற்றுக் கொண்டேன். என் உறவினர் `கிடைக்காதது நல்லது தான் போ` என்று தேற்றி அனுப்பினார். நாட்பட்ட பின் அது சரிதான் என்று பட்டது.

`எழிற் பூ` என்ற கதையை எழுதிய ஆம்பூர் கோ. கேசவனும், பின்னாளில் நல்ல நகைச்சுவை எழுத்தாளராகப் புகழ் பெற்ற முகுந்தன் என்ற புனைப் பெயர் கொண்ட எஸ்.வரதராஜனும் உதவி ஆசிரியர்களாகத் தேர்வு செய்யப்பட்டு விகடனில் பணியாற்றினார்கள். அதற்குப்பிறகு அந்த திட்டம் கைவிடப்பட்டது. பல வருஷங்களுக்குப் பிறகு மீண்டும் மாணவ நிருபர் திட்டம் வந்தது. ஆம்பூர் கேசவன் கொஞ்ச நாளில் நோய்ப்பட்டு இறந்து போனார். எஸ்.வரதராஜனும் விகடனை விட்டு வெளியேறி முகுந்தன் என்ற பெயரில் நகைச்சுவை எழுத்தாளராகப் பிரபலமானார். இப்போது அவரைப் பற்றித் தகவல் ஏதும் இல்லை. அவரது எழுத்துக்களையும் பார்க்க முடியவில்லை. என் உறவினர் சொன்னபடி அப்போது விகடனில் வாய்ப்பு கிடைக்காமல் போனதும் நல்லதற்குத்தான் என்று இப்போது படுகிறது. அதன் பிறகு விகடனிலேயெ நிறைய எழுதியதுடன் அதில் விசேஷமான `ஜாக்பாட்` பரிசும் பெற்றேன். ஆசிரியர் பணியில் பதவி உயர்வும் பெற்றுப் பேராசிரியாக ஓய்வும் பெற்றேன்.

-தொடர்வேன்.
-வே.சபாநாயகம்.

Posted at 07:55 pm by Tamil Blogs
Comments (1)

Thursday, January 22, 2004
நினைவுத் தடங்கள் - 10அண்ணாமலையில் என்னுடன் பயின்றவர்களில் இன்று பிரபலமாக இருப்பவர்களில் சமீபத்தில் `விளக்கு விருது` பெற்ற கவிஞர் சி.மணி விடுபட்டு விட்டது. முன்னர் குறிப்பிட்டவர்கள் பட்டப் படிப்புவரை என்னுடனும் எனக்கு ஓரிரு ஆண்டுகள் முன்னும் பின்னும் பயின்றவர்கள். சி. மணி அண்ணாமலையில் 1955ல் தொடங்கப்பட்ட ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இரண்டாவது `பேட்ச்` ஆக 1956-57ல் என்னுடன் பயின்றார். அவரது இயற்பெயர் பழனிசாமி. அவர் ஆங்கில முதுகலை பயின்றவர். பயிற்சி முடிந்ததும் சேலம் பெரியநாய்க்கன் பாளையம் அரசு ஆசிரியர் பயிற்சிக் கல்லுரியில் ஆங்கில விரிவுரையாளராகச் சேர்ந்தார்.

கல்லூரியில் உடன் பயின்றபோது நாங்கள் அவரைக் கவிஞராக அறிந்திருக்கவில்லை. அவர் மிகவும் சாது. மிகவும் அடக்கமானவர். கூச்ச சுபாவம் உள்ளவர். அதிகமாக யாரிடமும் பழக மாட்டார். என்னுடன் நட்புக் கொண்டிருந்தவர். கல்லூரிக் காலத்திலேயே எழுத்தாளனாக என்னை அவர் அறிவார். ஆனால் எனக்குதான் அவர் கவிஞர் என்று தெரிந்திருக்கவில்லை. ஆசிரியப்பணி ஏற்று 10 ஆண்டுகளுக்குக்குப் பின்னர் சி.சு.செல்லப்பாவின் `எழுத்து`வில் பிரபல கவிஞரான போது தான் அவர் என் கல்லூரி நண்பர் என்று ந.முத்துசாமியின் மூலம் அறிய நேர்ந்தது.

அப்பொது முத்துசாமி கூத்துபட்டறையைத் தொடங்கி இருக்கவில்லை. `கசடதபற` குழுவினரில் ஒருவராக இருந்து அதன் மூலமும் கணையாழி மூலமும் நல்ல சிறுகதைஆச்¢ரியராக அறியப் பட்டிருந்தார். அப்போதெல்லாம் நான் சென்னை சென்றால் தீபம் அலுவலகத்திற்கும் கசடபற குழுவினர் (சா.கந்தசாமி, ஞானக்கூத்தன்) அறைக்கும் செல்லாமல் திரும்புவதில்லை. அப்படி ஒருமுறை போன போது தான் திருவல்லிக்கேணியில் ஞானக்கூத்தன் அறையில் ந.முத்துசாமியைச் சந்தித்தேன். பேச்சுவாக்கில் எனது கல்லூரிப் படிப்பு பற்றி பேச்சுவந்த போது 56-57ல் அண்ணாமலையில் பயின்றிருந்தால் சி.மணி உங்களுடன் படித்திருக்கணுமே என்று முத்துசாமி கேட்டார். பிறகு விவரம் கேட்ட பிறகு தான் தெரிந்தது பழனிசாமிதான் அவர் என்று. உடனே அப்போது சென்னைக்கு வந்திருந்த சி.மணியிடம் அழைத்துச் சென்றார்.

10 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த நான் கல்லூர்¢க் காலத்தில் அவர் கவிஞர் என்று எங்களுக் கெல்லாம் காட்டாதி- ருந்ததற்கும் முத்துசாமி மூலம் அறிய நேர்ந்ததற்கும் கோபித்துக் கொண்டேன். அப்போது அவர் `நடை` என்ற சிற்றிதழைத் துவக்கி ஒரு இதழ் வந்திருந்தது. இரண்டாம் இதழில் அவர் கேட்டுக் கொண்டபடி எம்.டி.வாசுதேவன் நாயரின் `நாலுகட்டு வீடு` - சி.ஏ.பாலன் மொழிபெயர்த்தது- நாவலை விமர்சித்து எழுதினேன். பொருளாதார நெருக்கடி இல்லாதிருந்தும் தரமான படைப்புகள் வராததால் ஆறு இதழ்களுக்குப் பின் அந்த தரமான `நடை` இதழை அவர் ந்¢றுத்தி விட்டார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது அவர் விளக்கு பரிசு பெற்றதையும் அவரது முதிய தோற்றத்தையும் செய்தித் தாட்களில் பார்த்ததும் வாழ்த்துத் தெரிவிக்க விரும்பி னேன் என்றாலும் இன்றுவரை அவரது தற்போதைய முகவரி தெரியாமல் விசாரித்துக் கொண்டிருக்கிறேன்.

பட்டப் படிப்பு காலத்தில் சிற்பி அவர்கள் தம்முடன் தமிழ் ஆனர்ஸ் பயின்ற நண்பர்கள் ச.மெய்யப்பன், மருதூர் இளங்கண்ணன் போன்றவர்களை ஆசிரியக் குழுவாகக் கொண்டு `முத்தமிழ்` என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார். நான் ஓவியராக அதில் அட்டைப் படமும் உள் சித்திரங்களும் வரைந்தேன். அந்தப் பத்திரிகைப் பயிற்சிதான் பின்னாளில் சிற்பி புகழ் பெற்ற கவிஞரானதற்குப் பயிற்சிக் களமாக அமைந்தது எனலாம். அந்த கால கட்டத்தில் நான் நிறைய கதைகள் எழுதி, அப்போது புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்த நாரண துரைக்கண்ணனை ஆசிரியராகக் கொண்ட `ஆனந்த போதினி` மற்றும் `பிரசண்டவிகடன்`, எ.ஸ்.எஸ்.மாரிசாமியை ஆசிரியராகக் கொண்ட `இமையம்` மற்றும் `பேரிகை`,அரு.ராமனாதனின் `காதல்` இதழ்களில் பிரசுரம் ஆனது. சன்மானம் இல்லை என்றாலும் ஒரு ஆரம்ப எழுத்தாளனை ஊக்குவித்த நாரண துரைக்கண்ணன், எஸ்.எ.ஸ்.மாரிசாமி, அரு.ராமனாதன் ஆகியோரை மறக்க முடியாது.

அப்படி இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்க இன்று யார் இருக்கிறார்கள்? அதிகம் விற்பனையில்லாத பத்திரிகைகளில் கொஞ்சம் காலூன்றி நிற்கத் தொடங்கியதும் `ஆனந்தவிகடன்` போன்ற பிரபல பத்திரிகளில் என் கதைகள் வரவேண்டுமே என்ற தாகம் ஏற்பட்டது. விகடனில் எல்லாம் என் போன்ற தொடக்க நிலைப் படைப்பாளிகளுக்கு இடம் கிடைக்குமோ என்று ஏக்கம் கொண்டிருந்த போது தான் எஸ்.எஸ்.வாசன் அவர்கள் முதன் முறையாக `விகடன் மாணவர் திட்டத்தை 1956ல் அறிமுகப் படுத்தினார். அது என்னைப் போன்ற ஆரம்ப எழுத்தாளர்களுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்தது.

-தொடர்வேன்.
- வே.சபாநாயகம்.


Posted at 10:29 pm by Sabanayagam
Make a comment

Monday, January 12, 2004
நினைவுத் தடங்கள் - 9


கல்வி வள்ளல் ராஜாசர் அண்ணாமலை செட்டியாருக்கு எங்கள் தென்னார்க்காடு மாவட்டத்(இப்போதைய கடலுர், விழுப்புரம் மாவட்டங்கள்) துக்காரர்கள் பெரிதும் கடமைப் பட்டவர்கள். ஏனெனில் சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அமைக்கப் பட்டிருக்காவிடில் என்னைப் போன்ற ஆயிரமாயிரம் பேர் உயர் கல்வி பெற்றிருக்க முடியாது. மலையாளிகள், இலங்கைத் தமிழர்கள் எனப் பல் திசைகளிலிருந்தும் மாணவர்கள் வந்து பயின்றாலும் சிதம்பரத்தைச்சுற்றி இருந்தவர்கள் தாம் அதிகமும் அங்கு படித்தவர்கள். விழுப்புரம், கடலுர், சீர்காழி, மாயவரம் ஆகிய இடங்கள்¢லிருந்து தினமும் ரயிலில் வந்து படித்தவர்கள் அதிகம். இப்போது பேருந்து வசதி பெருகி விட்டதால் எல்லா பகுதிகளிலிருந்தும் ஏராளமான பேர் தினமும் பயணம் செய்து அங்கு படிக்கிறார்கள்.

1951ல் நான் அங்கு இண்டர்மீடியட்டில் சேர்ந்த பொழுது, பேருந்து வசதி இல்லாததால், ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன். அந்த நாளைய ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்டவர்களுக்கு அங்கு படித்துப் பட்டம் பெற்றதை மறக்க முடியாதது போலவே, சாப்பாட்டையும் மறக்க முடியாது. மாதம் 45-50 ரூபாய்க்குள்தான் பில் வரும். அவ்வளவு மலிவாக அவ்வளவு அற்புதமான சாப்பாட்டை எங்கும் நான் கண்டதில்லை, கேட்டதில்லை. அந்த நாளைய ஹாஸ்டல் வாழ்க்கையில் பெற்ற அனுபங்கள் என்றும் பசுமையாய் நிற்பவை.

பல மாவட்டத்து மாணவர்கள், பல மாநிலத்து மாணவர்கள், இலங்கைத் தமிழர்கள் என்று பல்வேறு கலாசார, பண்பாட்டுக்காரர்களுடன் பழக நேர்ந்ததால் உலகம் பரந்து தென்பட்டது. அறிவு விசாலப் பட்டது. அரசியல் அதிகமும் புழங்கியதால் விரும்பாமலே அரசியலை அறிந்து கொள்ளும் கட்டாயமும் ஏற்பட்டது. நான் சேர்ந்த பொழுது, மணவாள ராமானுஜம் என்ற கண்டிப்பான துணைவேந்தர் இருந்தார். அவர் மாணவர் ஒழுக்கத்தில் மிகவும் கண்டிப்பாக இருந்தது பல மாணவர்க்குப் பிடிக்கவில்லை. ஹாஸ்டலிலும் கடுமையான கண்காணிப்பு. மாலை ஆறு மணிக்கு கேட் பூட்டப் பட்டுவிடும். அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அதற்குமேல் வெளியே செல்லவோ திரும்பவோ முடியும். மீறினால் மறுநாள் நோட்டீஸ் போர்டில் பெயர் வந்துவிடும் அபராத அறிவிப்புடன். இது சினிமா பார்க்கிறவர்கள், அருகில் உள்ள ரயில்வே ஸ்டேஷனுக்குப்போய் கலர் பார்ப்பவர்களுக்கெல்லாம் இடைஞ்சலாக இருந்தது. இது போதாதென்று ஆண்கள் விடுதியிலிருந்து கூப்பிடு தொலைவில் இருந்த பெண்கள் விடுதிக்குச் செல்லும் சாலை மறித்துச் சுவர் எழுப்பப்பட்டது.

இது தங்களைச் சிறுமைப் படுத்துவதாகக் கூறி பெரிய ஆர்ப்பாட்டமும் வேலை நிறுத்தமும் நடைபெற்றது. மாணவிகளையும் இதில் சேர்த்துக் கொண்டார்கள். துணைவேந்தரின் மாளிகையை முற்றுகை இட்டு அவரை வீட்டுக்காவல் போல வைத்து விட்டார்கள். ஒருகட்டத்தில் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்படுகிற நிலைமை ஏற்பட்டது. அப்போது ஒரு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டு திராவிடக் கழக அனுதாபிகள் துணைவேந்தருக்கு ஆதரவாக மாறவே மாணவர்களுக்குள் பிளவு ஏற்பட்டது. பிராமணர்களும் மலையாளிகளும் மணவாளராமானுஜம் பிராமணரல்லாதவர், தமிழர் என்பதற்காகவே அவரை வெறுக்கிறார்கள் என்றொரு பேச்சு எழவே பிராமணரல்லாத தமிழர்கள் துணைவேந்தரைக் காப்பாற்ற முனைந்தார்கள். காலம் சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் தலைமையில் திராவிடர் கழக மாணவர்கள் துணைவேந்தர் மாளிகையின் மாடியி¢ன் பின்புறம் கயிற்றை இறக்கி அதன்மூலம் துணைவேந்தரை வெளியேற்றிக் காப்பாற்றினார்கள். அப்போதுதான் நான் அங்கு சேர்ந்தேன். கடுபிடிகள் மேலும் அதிகமாக்¢ அடையாள அட்டையெல்லாம் வழங்கப்பட்டு நெருக்கடி காலம் போல ஆகிவிட்டது. அதன் பிறகு திராவிட இயக்கத்துக்குப் பாசறை போல ஆகிவிட்டது. 1946 -47களில் பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோர் பயின்ற போது ஒடுக்கப்பட்ட திராவிடக் கழகத்தினர் மணவாளராமானுஜம் அவர்கள் காலத்தில் வலுப்பெற்று பிராமணர், பிராமணரல்லாதார் என்ற பாகுபாடு ஏற்பட்டது. அத்துடன் அண்ணாமலை சர்வகலாசாலை என்பது சர்வ கலாட்டா சாலை என்ற அவப்பெயரும் ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் தான்,

எனக்கு ஓரிரு ஆண்டுகள் முன் பின்னாகவும் என்னோடும் இன்றய பிரபல அரசியல்வாதிகளும், எழுத்தாளர்களும், கவிஞர்களும், அறிவியலாளர்களும் அங்கு பயின்றார்கள். அப்போது பிரபலமாயிருந்த `பொன்னி` என்ற இலக்கிய ஏட்டினால் `பாரதிதாசன் பரம்பரை` என்று அடையாளம் காட்டப்பட்ட கவிஞர் பொன்னடியான், கவிஞர் மு.அண்ணாமலை (`தாமரைக்குமரி` கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்), இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் எனக்கு இரண்டு ஆண்டுகள் முன்னதாக தமிழ் ஹானர்ஸ் பயின்றார்கள். இன்றைய திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணியும், கவிஞர் சிற்பியும், பதிப்புச்செம்மல் ச.மெய்யப்பனும் உடன் பயின்றார்கள். பழ.நெடுமாறனும், பண்ருட்டி ராமச்சந்திரனும் ஓராண்டு பின்னால் பயின்றார்கள். சிற்பி, மெய்யப்பன் ஆகியோரது இலக்கிய நட்பில் எனது கல்லூரிகால எழுத்துப் பணி தீவிரமடைந்து, நிறையப் பத்திரிகைப் பிரசுரங்கள் நிகழ்ந்தன.

- தொடர்வேன்.
- வே.சபாநாயகம்.

Posted at 11:25 am by Sabanayagam
Comments (2)

Saturday, January 03, 2004
நினைவுத் தடங்கள் - 8இன்றைய எனது வறளாத இலக்கியப் பிரக்ஞைக்கும் இலக்கியத் தேடலுக்கும் என் பள்ளிப்பருவத்தில் நிறையப் படிக்கக் கிடைத்ததும் சூழ்ந்¢லையும் தான் காரணம். நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே தினமணி வாசிக்க அப்போதைய `இலட்சுமிகாந்தன் கொலை வழக்கு` விசாரணை தூண்டுகோலாக இருந்தது. 1944-45ல் அந்தக் கொலை வழக்கு விசாரணை
பரபரப்பாகப் பேசப்பட்டது. திரை உலகில் பிரபலமாக இருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர் என்.எஸ்.கிருஷ்ணன் இருவரும் பிரதான குற்றவாளிகளாக நிறுத்தப் பட்டு வி¡ரணை நடந்தது. லட்சுமிகாந்தன் என்பவர் இந்துநேசன் என்கிற தனது மஞ்சள் பத்திரிகையில், இன்றைய கிசுகிசு போல பூடகமாக இல்லாமல் வெளிப்படையாய் பெயர் குறிப்பிட்டே சினிமா நட்சத்திரங்களை
மிகக்கேவலமான மொழியில் படிக்கவே கூசுகிறமாதிரி திட்டி எழுதி வந்தார். பணம் பறிக்கும் நோக்கம்தான் பிரதானம். பாகவதர்- டி.ஆர்.ராஜகுமாரி, டி.ஆர்.மகாலிங்கம்-வரலட்சுமி என்.எஸ்.கிருஷ்ணன்- டி.ஏ.மதுரம் ஜோடிகளை அற்பத்தனமாக அவர்களது அந்தரங்களைக் கொச்சைப் படுத்தி எழுதினார். பத்திரிகை கிடைக்கவில்லை என்கிற அளவுக்கு பரபரப்பான செய்திகள். இதனால் பலரும் பாதிக்கப்பட்ட நிலையில் யாரோ திட்டமிட்டு அவரைக் கொலை
செய்துவிட, பாகவதரும் கிருஷ்ணனும் கைதானார்கள். அந்த வழக்கின் விசாரணை விஸ்தாரணமாக குறுக்கு விசாரணனையின் கேள்வி-பதில் உட்பட-இப்போது போலத் தொகுத்துப் போடாமல் நாமே நீதிமன்றத்தில் இருந்து நேரில் பார்ப்பது போல் பத்திரிகைகளில் வந்தன.

என்னைப் போன்ற சிறுவர்களும் துப்பறியும் தொடர்கதை படிக்கிறமாதிரியான சுவாரஸ்யத்துடன் இருந்தது என்றால் அது ஏற்படுத்திய பாதிப்பின் வீச்சை உணரலாம். அப்படித்தான் என் பத்திரிகைப் படிப்பு ஆரம்பித்தது. அதல்லாமல் புதிதாக அப்போது தொடங்கப் பட்ட நூலகமும் என் பரந்த படிப்புக்கு உதவியது. `மெய்கண்டார் வாசகசாலை` ( மெய்கண்டார் அவதரித்த ஊர் அது- பெண்ணாடம் என்பதால்) என்ற அந்த நூலகத்தை பக்தவச்சலம் திறந்து வைத்தார். அங்குதான் நான் அப்போது பிரபலமாய் இருந்த வங்காள நாவல்களை- பக்கிம் சந்திரர், சரத்சந்திரர் எழுதியவை
எல்லாம் படிக்க நேர்ந்தது. ஆனந்த விகடனில் அப்போது தேவனோ யாரோ எழுதிவந்த `சூர்யகாந்தி` என்ற
தொடர்கதை படித்ததும் நினைவுக்கு வருகிறது. அப்போது இரண்டு எதிர் எதிர் பத்திரிகைகள்- தார்மீக ஹிந்து, நாத்திகம் என்று ஞாபகம்- நடத்திய விறுவிறுப்பான விவாத யுத்தம் இன்னும் நினைவில் நிற்கிறது.


வாசகசாலையை ஒட்டித்தான் வானொலித் திடல் இருந்தது. அங்குதான் நான் பெரியாரையும், ராஜாஜியையும் முதன் முதல் பார்த்தேன். ஒரு பெரிய காங்கிரஸ் மாநாடு அங்கு நடந்தது. ராஜாஜி தலைமையி நடைபெற்ற அந்தக் கூட்டத்துக்கு ம.பொ.சி, அண்ணாமலைப்பிள்ளை, சுத்தானந்த பாரதி, சின்ன அண்ணாமலை, சேலம் சுப்பிரமணியம் ஆகியோர் வந்திருந்
தது பசுமையாய் நினைவில் நிற்கிறது. அப்போது காந்தியடிகள் தமிழ்நாட்டில் சுற்றுப் பயணத்தல் இருந்தார். அவருக்காகத் தனி ரயிலே விடப்பட்டிருந்தது. அவர் கார்டு லைனி¢ல் அப்போது பயணித்திருந்தார். திருச்சி போகும் வழியில் அரியலூர் நிலையத்தில் மட்டும் 5 நிமிஷம் நிறுத்தி தரிசனம் தர ஏற்பாடாகி இருந்தது. காந்திஜியைப் பார்க்க பள்ளியிலிருந்து எங்களைக் கூட்டிச்சென்றார்கள். கண்ணுக்கெட்டியவரை மிகப் பிரமாண்ட ஜனசமுத்திரம் பாபுவைத் தரிசிக்கக் கூடியிருந்தனர். சரியாகக் குற்¢ப்பிட்ட நேரத்துக்கு காந்திஜியின் ரயில் வந்தது. அவர் இருந்த கம்பார்ட்மெண்டின் கதவு ஒருபெரிய அகழிப்பாலம் போல முன்னால் சங்கிலியில் பிணைத்த மேடையாகத் திறந்தது. எதிர் வெய்யலில் செப்புச் சிலையில் நிறத்தில் கண்கலைக் கூசவைக்கிற பிரகாசத்தில் பாபுஜி மக்கள் கூட்டத்தை நோக்கிக் கைஅசைத்தார். `மகாத்மா காந்திக்கு ஜே!` என்ற விண்ணை எட்டிய கோஷம்
உடலைச் சிலிர்க்க வைத்தது. 60 ஆண்டுகள் ஆகியும் அந்த சிலிர்ப்பு மறக்க வில்லை.

பெரியார் வானொலித் திடலில் பேசிய போது அவர் மக்களது அறியாமையை இடித்துரைத்தது அந்த சின்ன வயதிலேயே எனக்கு ஒரு விழிப்புணர்ச்சியை உண்டாக்கியது. அப்போது பெரியாரிடம் ஒரு சீட்டு தரப்பட்டது. அதைப் படித்த பெரியார், ` ஒருத்தர் கேட்டிருக்காரு- நீங்கதான் கடவுளை மறுக்கிறவராச்சே, பேரை ஏன் ராமசாமின்னு வச்சிருக்கீங்கன்னு. அதுவா அது- நான் ராமனுக்கு சாமி` என்று பதில் சொன்னர். ஒரே கைத்தட்டல். ஆரவாரம். நான் அதை வெகுநாட்கள் பார்க்கிறவரிடமெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தேன். பிறகு வேரொரு ஊரில் நடைபெற்ற அவரது கூட்டத்துக்குச் சென்றபோது இதே `நான் ராமனுக்கு சாமி` என்ற விளக்கத்தைக் கேட்டதும் எனக்குச் சப்பிட்டுப் போயிற்று. பெரியாரும் இப்படிபட்ட செப்பிடுவித்தை செய்யநேருவதை நினைத்து மனதில் சலிப்பு ஏற்பட்டது.

- தொடர்வேன்.
-வே.சபாநாயகம்.

Posted at 09:12 pm by Tamil Blogs
Make a comment

Next Page